இரவோடு இரவாக நடந்த அதிர்ச்சி...28 பேரை தூக்கிய எடப்பாடி! பதிலடியாக சி.வி.சண்முகம் கொடுத்த மரண அடி.... நீதிமன்றம் வரை செல்லும் அதிமுக மோதல்..!!!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பின்னடைவை சந்தித்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் ஏற்பட்ட உட்கட்சி மோதல் தற்போது வெளிப்படையான அதிகாரப் போராட்டமாக மாறியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கும், எஸ்.பி.வேலுமணி - சி.வி.சண்முகம் தலைமையிலான அதிருப்தி அணிக்கும் இடையே ஆதரவு பலம் குறித்து கடும் போட்டி நிலவி வருகிறது.
தற்போதைய கணக்குப்படி, எடப்பாடி பழனிசாமி அணிக்கு 22 எம்.எல்.ஏ-க்களும், அதிருப்தி அணிக்கு 25 எம்.எல்.ஏ-க்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், 28 மாவட்ட செயலாளர்களை பதவியில் இருந்து நீக்கி இபிஎஸ் வெளியிட்ட உத்தரவு கட்சிக்குள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஓபிஎஸ்-க்கு பேரதிர்ச்சி கொடுத்த இபிஎஸ்! அதிமுக வில் இணைந்த மா.செயலார்கள் மற்றும் நிர்வாகிகள்... அதிமுக வில் அதிகரிக்கும் அரசியல் பலம்!!!
சென்னையில் இபிஎஸ் ஆலோசனை கூட்டம்
இந்த அரசியல் பரபரப்புக்கு மத்தியில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அவர், “பதவிக்காக சிலர் கட்சிக்குத் துரோகம் செய்து சென்றுள்ளனர். இந்த சூழலில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்று நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டார்.
மேலும், மாவட்டங்களைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கையெழுத்துகள் அடங்கிய படிவங்களையும் நிர்வாகிகள் நேரடியாக இபிஎஸிடம் சமர்ப்பித்தனர். இதன் மூலம் தங்களின் பலத்தை நிரூபிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
சி.வி.சண்முகத்தின் கடும் குற்றச்சாட்டு
இதற்குப் பதிலடியாக, அதிருப்தி அணியின் முக்கிய தலைவரான சி.வி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து இபிஎஸ் தலைமையை கடுமையாக விமர்சித்தார். கட்சியின் தொடர்ச்சியான தோல்வி மற்றும் வாக்கு வங்கி சரிவு குறித்து விவாதிக்க இபிஎஸ் மறுத்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், ஓபிஎஸ் உள்ளிட்ட பிரிந்து சென்ற தலைவர்களை மீண்டும் இணைக்காததும், வலுவான கூட்டணியை உருவாக்காததுமே தேர்தல் தோல்விக்குக் காரணம் என்றும் கூறினார். தவெக, தேமுதிக, புதிய தமிழகம் போன்ற கட்சிகளை அரவணைத்து செல்லாமல், பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டதால் அவர்கள் கூட்டணியில் இருந்து விலகியதாகவும் சாடினார்.
நீதிமன்றம் வரை செல்லும் மோதல்?
இபிஎஸ் அறிவித்துள்ள மாவட்ட செயலாளர் நீக்க உத்தரவுகள் செல்லாது என்றும் சி.வி.சண்முகம் தெரிவித்தார். பொதுக்குழுவைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்குப் பயந்தே, உறுப்பினர்களிடம் மிரட்டலின் மூலம் கையெழுத்து பெறப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
அதேபோல், ஜெயலலிதா மறைவின்போது பொறுப்பில் இருந்த நிர்வாகிகளின் கையெழுத்துகளே சட்டப்படி செல்லும் என்றும், தற்போது நியமிக்கப்பட்டுள்ள புதிய மாவட்ட செயலாளர்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் சவால் விடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதனால், அதிமுகவில் உருவாகியுள்ள அதிகார மோதல் அடுத்த கட்டமாக நீதிமன்றத்தை நோக்கி நகரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவில் ஈகோ அரசியல் நடக்குது.... மூத்த தலைவர் செம்மலை கட்சியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு! அமைதியாக இருந்தேன்.... இப்போ விலகுகிறேன்!!!