குளிர்காலத்தில் அதிகரிக்கும் வாய்ப்புண் பிரச்சனை.. இந்த விஷயங்களை நோட் பண்ணுங்க.!
குளிர் காலத்தில் தண்ணீர் குறைவாக குடிப்பதன் காரணமாக வாய்ப்புண், மலச்சிக்கல், செரிமான கோளாறுகள் அதிகரித்து வருகிறது.
2026 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து ஒட்டுமொத்த இந்தியாவிலும் கடுமையான குளிர் வாட்டி வதைத்து வருகிறது. தமிழகத்தில் குளிர் காலம் காரணமாக சளி பிரச்சனை, காய்ச்சல், இருமல் போன்றவை அதிகரித்துள்ளது. இவ்வாறான உடல்நல கோளாறுகளுக்கு மத்தியில் சிலருக்கு வாய்ப்புண் பிரச்சனையும் அதிகரித்துள்ளது.
தண்ணீர் குறைபாடு:
குளிர்காலத்தில் வறண்ட காற்று உடலில் இருக்கும் ஈரப்பதத்தை குறைக்கும் என்பதால் உடல் வறட்சி அதிகரிக்கிறது. தோல் வறண்டு அது காயங்களாக மாறி வாய் புண்களாகவும் ஏற்படுகின்றன. இந்த புண் வலி மிகுந்திருக்கும் என்பதால் பலரும் இதனால் அவதிப்படுகின்றனர். குளிர் காலத்தில் பலரும் உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை குடிக்காமல் இருப்பதால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
இதையும் படிங்க: "நீரின்றி அமையாது உலகு." எப்போது? எப்படி..? எவ்வளவு? குடிக்க வேண்டும்.!

வாய்ப்புண் முதல் வயிறு வீக்கம் வரை:
குளிர்ந்த சூழல் காரணமாக தாகம் எடுக்கவில்லை என பலரும் தண்ணீர் குடிக்க மறந்து விடுகின்றனர். இதனால் உடலில் வெப்பம் அதிகரித்து எரிச்சல், சோர்வு, வாய்ப்புண் போன்றவையும் ஏற்படுகிறது. சரிவர தண்ணீர் எடுத்துக் கொள்ளாத காரணத்தால் மலச்சிக்கல் பிரச்சனையும் அதிகரிக்கிறது. செரிமானம் மெதுவாகி வயிறு சரியாக சுத்தம் செய்யப்படாமல் வயிறு வீக்கம் தொடர்பான பிரச்சனையும் ஏற்படுகிறது.
வாய்ப்புண்களை சரிசெய்வது எப்படி?
இந்த காலத்தில் அசைவ உணவுகளை குறைப்பது நல்லது. உடலுக்கு தேவையான நீரை குடிப்பது உடல் நலத்துக்கு நன்மை தரும். வாய்ப்புண்கள் இருப்பவர்கள் மூன்று நாட்களுக்கு இளம் சூடுள்ள நீரில் உப்பு சேர்த்து வாய் கொப்பளித்து வர நல்ல பலன் கிடைக்கும். வாயில் நெய்யை தடவுவது குளிர்ச்சி அளிக்கும்.