ஞாயிற்றுக்கிழமை: விடுமுறை நாளில் என்ன செய்யலாம்?..! குடும்பத்தின் மகிழ்ச்சியே நமது மகிழ்ச்சி.!!



Sunday Plan Tips Tamil

கால்களில் சக்கரம் இல்லாத குறையாக பணம், குடும்பம், தேவை, எதிர்பார்ப்பு என்ற பல்வேறு காரணத்தால் நாம் ஓயாத உழைப்பாளியாக மாறிக்கொண்டு இருக்கிறோம். உழைப்பாளியாக இருப்பதில் தவறில்லை, நமது குடும்பத்தினரையும், மனைவியையும், குழந்தையையும் சரிவர கவனிக்காமல் உழைப்பாளியாக இருப்பது, குடும்பத்தினருக்கு எதிர்பாராத மன விரக்தியை ஏற்படுத்தும். 

மாதத்தில் உள்ள 31 நாட்களில் 4 ஞாயிற்றுக்கிழமைகள் வருகிறது. பெரும்பாலும் சனிக்கிழமையும் பலருக்கும் வேலைகள் இருக்கிறது. சில நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமையும் வேலைகளை வைக்கிறது. இதனால் குடும்பத்தின் தலைவியாக, தலைவராக உழைக்கும் பலரும், தங்களது குடும்பத்துடன் சிலமணிநேரம் கூட பொழுதை கழிக்க இயலாமல் தவித்து வருகின்றனர். 

Sunday

நிறுவனங்கள் ஒருபுறம் அப்படி இருக்க, தனிநபர்களும் விடுமுறை நாட்களில் எங்கும் செல்ல வேண்டாம், படுத்து உறங்கலாம் என்ற மனநிலையிலேயே இருக்கின்றனர். மேலும், வெளியே சென்று வந்தால் செலவுகள் அதிகளவு ஏற்படும் என்ற அச்சமும் நடுத்தர குடும்பத்தார்களை வாட்டி வதைக்கிறது. 

இவ்வாறு இருப்பவர்கள் உழைப்பாளியாக இருந்து ஓயாமல் உழைத்தாலும், அவர்களின் உடல்நலத்தையும் பார்க்காமல், குடும்பத்தினரையும் கவனிக்க இயலாமல் தவிக்கின்றனர். இவ்வாறு இருப்பவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கவும், அவர்களின் குடும்பத்தினருக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கவும் பல வழிகள் உள்ளன. 

அதிக செலவுகள் இல்லாமல் குடும்பத்துடன் இன்பமாக பொழுதுகளை கழிக்க சில ஆலோசனைகள் குறித்து இன்று காணலாம். அன்றைய நாட்களில் விடுமுறை நாட்கள் என்றால் கோழி, ஆடு போன்ற இறைச்சிகளை எடுத்து வந்து, குழம்பு, பொரியல் என பலவகை உணவுகளை குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து ஒருவருக்கொருவர் உதவியாக இருந்து சமைப்பார்கள். ஒவ்வொருவரும் தங்களின் நினைவுகளை பகிர வாய்ப்புகள் கிடைத்தது. அதனை மீண்டும் செயல்படுத்தலாம். 

Sunday

காலை எழுந்து சமையலை முடித்ததும் மதியத்திற்கு மேல் உறங்க செல்லாமல், குடும்பத்தினர் அனைவரும் செலவில்லாமல் வீட்டிலேயே படம் பார்க்கலாம். இன்றளவில் பெரும்பாலான வீடுகளில் தொலைக்காட்சி உள்ளது, மடிக்கணினி உள்ளது. அன்று டி.வி.டி டெக்கை வாடகைக்கு எடுத்து அக்கம் பக்கத்து மக்களுடன் கைதட்டி, ஆரவாரத்துடன் பார்த்து ரசித்திருப்போம். இன்று அக்கம் பக்கத்துக்கு வீட்டினரை அழைக்க முடியாது என்றாலும், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரு படத்தை பார்க்கலாம். 

அவ்வாறு படம் பார்க்கும் போது புதிய படமோ, பழைய படமோ ஒவ்வொருவருக்கும் ஒரு விருப்பம் இருக்கும் என்பதால், நகைச்சுவையான மூன்றாம் தர படங்களை பார்க்கலாம். இதனால் அந்த நடிகர், இந்த நடிகர் என்ற சர்ச்சை நீங்கி, நகைச்சுவையை கண்டு குடும்பமே கொஞ்ச நேரம் சிறிது மகிழும். அதன்பின்னர், உறங்கி எழுந்தால் இரவாகிவிடும். இரவு நேரத்தில் அனைவரும் உணவை தயார் செய்து, வீட்டின் மாடிக்கு சென்று அமர்ந்து பேசிக்கொண்டு நிலாச்சோறு சாப்பிட்டு விடுமுறை நாட்களை இன்பத்துடன் கொண்டாடலாம். 

Sunday

நல்ல நிலையில் இருப்பவர்கள் தங்களின் குடும்பத்தினர் வாரத்தின் பெரும்பாலான நாட்கள் வீட்டிலேயே இருப்பதை கருத்தில் கொண்டு, அவர்களை அழைத்துக்கொண்டு உள்ளூரில் உள்ள சுற்றுலா தளத்திற்கு சென்று வரலாம். திரைப்படத்திற்கு அழைத்து செல்லலாம். குடும்பத்தினர் அனைவரும் வாரம் ஒருமுறை தங்களின் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வரலாம். 

குடும்பத்தினர் மகிழ்ச்சியே உங்களின் மகிழ்ச்சியாக இருக்கும் பட்சத்தில், பட்ஜெட் பத்மநாபனில் இருந்து, பந்தா பரமசிவம் வரை இந்த டெக்னீக் உதவும்.