சென்னையில் பயங்கரம்: ரவுடிகளின் மதுபோதையில் சிக்கிய 7 வயது சிறுவனுக்கு அரிவாள் வெட்டு! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
சென்னையில் மதுபோதையில் அறிவாளை சுழற்றிக் கொண்டே வந்த ரவுடிகளால் வெட்டப்பட்டு படுகாயமடைந்த 7 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த ரவுடிகளை தேடி வருகின்றனர்.
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் நேற்று மாலை பைக்கில் வந்த 2 ரவுடிகள் மது போதையில் இருந்துள்ளனர். அவர்கள் தங்கள் கையில் வைத்திருந்த அரிவாளை சுழற்றியபடியே தெருவில் கத்தி கூச்சல் போட்டுக் கொண்டு வந்துள்ளனர். அப்போது தெருவில் தன் மாமாவுடன் நடந்து சென்று கொண்டிருந்த சிறுவனின் தலை மற்றும் தோல் பகுதிகளில் அரிவாளால் வெட்டப்பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. சிறுவனுக்கு காயம் ஏற்பட்டதை கண்டும் ஈவு இரக்கமில்லாத அந்த ரவுடிகள் சம்பவ இடத்தில் இருந்து பைக்கில் தப்பி ஓடிவிட்டனர்.
மண்டையிலும், தோள் பட்டையிலும் பலமாக காயமடைந்து ரத்த வெள்ளத்தில் வலியால் துடித்த அந்த சிறுவனை உடன் வந்த தாய் மாமா உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிறுவன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளான். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது.
சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவனின் நெற்றி, தோள் பட்டை, காது என பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். மேலும் சிகிச்சைக்காக சிறுவனின் தலை முடியை அகற்றி மொட்டை அடித்து நெற்றியில் தையல் போட்டுள்ளனர்.
தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்த தண்டையார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினர். விசாரணையில் படுகாயம் அடைந்த சிறுவன் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின் 7 வயது மகன் சந்துரு என்று தெரியவந்துள்ளது. கார்த்திக் அதே பகுதியில் டைலர் வேலை பார்த்து வருகிறார். சந்துரு அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
சந்துருவிற்கு ஏற்கனவே உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரது தாய் மாமா சந்துருவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு திரும்பி வரும் வழியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் குற்றவாளிகளான அந்த 2 ரவுடிகள் யார் என்று இன்னும் தெரியவில்லை. அந்த பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமராவில் ஏதேனும் தடயங்கள் கிடைக்குமா என்ன போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த ரவுடிகளின் போதைக்கு இறையாகி படுகாயமடைந்த சிறுவனின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதாக உள்ளது.