காதலிக்க மறுத்த மாணவி கழுத்தை அறுத்து கொலை: ஆத்திரத்தில் வாலிபர் வெறிச்செயல்..!
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம் விஜயவாடா பகுதியில் இயங்கிவரும் பல் மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தவர் அந்த மாணவி. அவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலதளத்தின் மூலமாக ஞானேஸ்வர் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அவருடனான நட்பு காதலாக மாறியது. இதன் பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை தவிர்த்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஞானேஸ்வர் மாணவிக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்துவந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மாணவி ஞானேஸ்வர் மீது விஜயவாடா காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் ஞானேஸ்வரை அழைத்த காவல்துறையினர் அவரை எச்சரித்து அனுப்பினர்.
சிறுது காலம் அமைதி காத்த ஞானேஸ்வர், கடந்த திங்கட்கிழமை இரவு மாணவியிடம் மீண்டும் பேச முயன்றார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ஞானேஸ்வர் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் கழுத்தை அறுத்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்து அங்கு கூடிய அக்கம் பக்கத்தினர், ஞானேஸ்வரை பிடித்தபோது அவர் தனது கையை வெட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் ஞானேஸ்வர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.