ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்; பாதுகாப்பு பணியில் கூடுதல் படையினர்...!!

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்; பாதுகாப்பு பணியில் கூடுதல் படையினர்...!!



Terrorist attack in Jammu and Kashmir; Additional soldiers on security duty.

கடந்த சில நாட்களாக ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. 

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் காஷ்மீர் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனிடையே, கடந்த 1-ஆம் தேதி ஜம்முவின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள டோங்கிரி கிராமத்திற்குள் புகுந்த இரண்டு தீவிரவாதிகள் இந்து மதத்தினரின் வீடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். 

இந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நடந்த வீட்டின் அருகே தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த குண்டு வெடித்ததில், சிறுவன் உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், இதுவரை டோங்கிரி கிராமத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்தது. இதை தொடர்ந்து ரஜோரியில் மக்கள், உரிய பாதுகாப்பு வழங்கவும், தீவிரவாதிகள் தாக்குதலை கண்டித்தும், போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய இரண்டு தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீருக்கு கூடுதல் படைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீருக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஆயிரத்து 800 வீரர்கள், 18 குழுக்கள் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பூஞ்ச், ரஜோரி மாவட்டத்தில் இந்த கூடுதல் படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.