அம்மாவை பார்க்க மனைவியுடன் 480 கி.மீ சைக்கிளில் வந்த மகன்.! தாயை பார்த்த சில நிமிடங்களில் நடந்த சோகம்.!



son-cycling-480-kilo-meters-to-meet-her-illness-mom

புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட தனது தாய்யை பார்க்க அவரது மகன் 480 கிலோமீட்டர் சைக்கிளில் வந்த சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. 

புதுச்சேரியை சேர்ந்தவர் பெயிண்டர் ரேவு ஸ்ரீனி. தனது மனைவி லட்சுமி உடன் தெலுங்கானா மாநிலம் ஹைதாராபாத்தில் தங்கி பெயிண்டர் வேலை பார்த்து வந்துள்ளனர். தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் வேலைக்கும் செல்லமுடியாமல் வீட்டிலையே இருந்துள்ளார் ரேவு ஸ்ரீனி.

இந்நிலையில் புதுச்சேரியில் இருக்கும் அவரது தாய் மகாலட்சுமி புற்றுநோயினால் அவதிப்பட்டு வருவதாகவும், உடல்நிலை மிக மோசமாக இருப்பதாகவும்  உறவினர்கள் ரேவுவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். தனது தாய்யை பார்க்க ஆசைப்பட்ட ரேவு ஸ்ரீனி போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறியுள்ளார்.

ஆனால் தனது அம்மாவை எப்படியும் பார்த்துவிட வேண்டும் என எண்ணிய அவர் தெலுங்கானாவில் இருந்து புதுச்சேரிக்கு சைக்கிளில் செல்ல முடிவெடுத்து, ரேவு ஸ்ரீனியும், அவரது மனைவியும் தனித்தனியாக சைக்கிள் பயணத்தை கடந்த 14ம் தேதி தொடங்கியுள்ளனர்.

தெலுங்கானாவில் இருந்து பாண்டிச்சேரிக்கு வரும் வழியில் பல இடங்களில் போலீசார் அவர்களை தடுத்து விசாரித்துள்ளனர். தாயின் உடல்நிலையை அவர்களிடம் விவரித்த ரேவு ஸ்ரீனி போலீசாரின் உதவியுடன், ஆங்காங்கே கிராமங்களில் மக்கள் கொடுத்த உணவுகளை சாப்பிட்டுவிட்டு சுமார் 480 கிலோமீட்டர் பயணம் செய்து பாண்டிச்சேரி வந்து சேர்ந்தனர்.

கடந்த 17ம் தேதி நள்ளிரவு புதுச்சேரி வந்த அவர்களை அதிகாரிகள் கொரோனா பரிசோதனைக்காக தனிமைப்படுத்தி வைத்தனர். பின்னர் 18ம் தேதி ரேவு ஸ்ரீனி அவரது தாய்யை பார்க்க அனுமதிக்கப்பட்டார். இதனை அடுத்து ரேவு ஸ்ரீனி தாயைப் பார்த்துள்ளார். தனது மகனை பார்த்த சில நிமிடங்களில் தாய் மகாலட்சுமியின் உயிர் பிரிந்துள்ளது.

இதனை அடுத்து சோகத்துடன் தாயின் இறுதிச்சடங்கை முடித்து, பின்னர் தனது மனைவியுடன் மீண்டும் தனிமைப்படுத்தும் முகாமிற்கு திரும்பியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.