ஜி.பி.எஸ் வசதியுடன் மாணவ மாணவிகளுக்கு தனித்தனி பஸ்கள்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அதிரடி..!

ஜி.பி.எஸ் வசதியுடன் மாணவ மாணவிகளுக்கு தனித்தனி பஸ்கள்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அதிரடி..!



Rangasamy has announced that separate free buses will be run for school boys and girls

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே இலவச பேருந்துகள் இயக்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். 

மாணவர்களுக்கான இலவச பேருந்துகளில் ஜிபிஸ் கருவிகள், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 
கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்குச் சென்று படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக கல்வித்துறை சார்பில் 1 ரூபாயில் சிறப்பு பேருந்து சேவை இயக்கப்பட்டு வந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் கிராமப்புற மாணவர்களுக்காக இயக்கப்பட்டு வந்த 1 ரூபாய் சிறப்பு பேருந்து தற்போது இலவச பேருந்தாக மாற்றப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டு இருக்கிறது. புதுச்சேரி மாணவர்களுக்கான இந்த இலவச பேருந்து சேவையை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 74 இலவச பேருந்துகள் மாணவர்களின் பயன்பாட்டுக்காக இயக்கப்படுகிறது, என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார். இதில் காரைக்காலில் 17 பேருந்துகள் இயக்கப்படுகிறது என்றும் மாணவர்களின் பாதுகாப்பை கருதி பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது என்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

மேலும் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு, தனித் தனியாக பேருந்துகள் இயக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். இதை தொடர்ந்து புதுச்சேரி, லாஸ்பேட்டை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, பொறியியல் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.