நடிகை தர்ஷா குப்தா உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. காரணம் என்ன?
பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி..! நள்ளிரவில் ஆட்டோ ஓட்டிச்சென்று உயிரை காப்பாற்றிய காவலர்.! குவியும் வாழ்த்துக்கள்.
பிரசவ வலியால் துடித்த இளம் பெண்ணனை காவலர் ஒருவர் ஆட்டோ ஓடிச்சென்று கர்ப்பிணி பெண்ணை சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா காரணமாக விழுப்புரம் மற்றும் புதுச்சேரி எல்லைப் பகுதிகள் முற்றிலும் முடக்கப்பட்டு எல்லை பகுதியில் போலீசார் காவலுக்கு உள்ளனர். இந்நிலையில், முத்தியால்பேட்டை பெருமாள் நாயுடு வீதியை சேர்ந்த இருவர் நள்ளிரவு 12 மணியளவில் நிறைமாத கர்ப்பிணியான தங்கள் மகளுக்கு பிரசவ வலி வந்துவிட்டாகவும், குழந்தை பிறக்கும் தருவாயில் இருப்பதால் தங்கள் மகளை மருத்துவமனையில் அனுமதிக்க உதவுமாறும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாண்டிச்சேரியை சேர்ந்த காவலர் கருணாகரன் என்பவரிடம் உதவி கேட்டுள்ளனர்.

நிலைமையை புரிந்துகொண்ட காவலர், அந்த வழியாக வாகனம் ஏதேனும் வருகிறதா என பார்த்துள்ளார். இரவு நேரம் என்பதால் வாகனம் எதுவும் வரவில்லை. பின்னர், அப்பகுதியில் வரிசையாக 4 க்கு ஆட்டோக்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்ட அவர் ஆட்டோ உரிமையாளர் பூமிநாதன் என்பவரின் உதவியை நாடியுள்ளார்.
அவரோ, தனக்கு வயதாகிவிட்டதால் தன்னால் இரவில் சரியாக ஆட்டோ ஓட்ட இயலாது, நான் ஆட்டோவை வாடகைக்கு விட்டுத்தான் சம்பாதிப்பதாக பூமிநாதன் கூறியுள்ளார். உடனே சற்றும் யோசிக்காத கருணாகரன் ஆட்டோ சாவியை பெற்றுக்கொண்டு ஊர்காவல் படை வீரர் அருண்ஜோதி என்பவரின் வழிகாட்டுதலுடன் நிறைமாத கர்ப்பிணியான மேகலாவை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்ததால் எந்தவித சிக்கலும் இன்றி, அன்று இரவே மேகலாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மேலும், தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுபற்றி கூறிய காவலர் கருணாகரன், 15 ஆண்டுகளுக்கு முன்பு விளையாட்டாக ஆட்டோ ஓட்டியுள்ளதாகவும், அந்த துணிச்சலுடன் இரவில் ஆட்டோவை இயக்கியதாகவும் கூறியுள்ளார்.
கருணாகரனின் இந்த மனிதாபிமான உதவிக்கு முத்தியால்பேட்டை தொகுதி எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் நேரில் சென்று வாழ்த்தினார். மேலும், கருணாகரனுக்கு துறை ரீதியாகவும் பாராட்டு சான்றிதழை காவல் துறை தலைவர் பாலாஜி ஸ்ரீவஸ்தவா வழங்கி கவுரவித்துள்ளார்.