தூக்கத்தை துளைத்த பல இரவுகள்....தினம் தினம் 17 மணி நேர போராட்டம்! ஆர்யன் குப்தாவின் வெற்றிக்கும் பின்னால் ஒளிந்திருக்கும் அந்த ஒரு வலி... நீட் தேர்வில் பிரம்மாண்ட சாதனை..!!!
ஆர்யன் குப்தா நீட் 2026 தேர்வில் 720-க்கு 715 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பகிர்ந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த அவர், வினாத்தாள் கசிவு விவகாரத்தால் முதல் தேர்வு ரத்து செய்யப்பட்ட ஏமாற்றத்தைத் தாண்டி மறுதேர்வில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
மறுதேர்வில் உச்சத்தை தொட்ட சாதனை
தேசிய தேர்வு முகமை வெளியிட்ட முடிவுகளின்படி, ஜூன் 21 அன்று நடைபெற்ற மறுதேர்வில் ஆர்யன் இந்த மதிப்பெண்ணைப் பெற்றார். ஹரியானாவைச் சேர்ந்த பன்ஷுல் பன்சாலுடன் இணைந்து நாட்டின் முதலிடத்தை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். மே மாதத்தில் நடந்த தேர்வு ரத்து செய்யப்பட்டபோது மனவேதனை ஏற்பட்டாலும், அதன்பின் தனது தயாரிப்பை நிறுத்தாமல் தொடர்ந்து கவனம் செலுத்தியதே வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.
பாட்டியின் இழப்பினால் மனதில் உருவான மருத்துவர் கனவு
ஆர்யன் 3-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, அவரது பாட்டி 4-ஆம் கட்ட புற்றுநோயால் உயிரிழந்தார். தந்தை டாக்டர் சச்சின் குப்தா மயக்க மருந்து நிபுணராகவும், தாய் டாக்டர் ரீனா குப்தா மகப்பேறு மருத்துவராகவும் இருந்தபோதிலும், பாட்டியை காப்பாற்ற முடியாத அந்த தருணம் அவரை ஆழமாக பாதித்தது. இதனால் புற்றுநோய் மருத்துவராகி நோயாளிகளுக்காக பணியாற்ற வேண்டும் என்ற இலக்கை அவர் மனதில் உறுதியாக வைத்துக் கொண்டார்.
16 மணி நேர உழைப்பும் மாணவர்களுக்கு அறிவுரையும்
தனது கனவை நனவாக்க தினமும் 16 முதல் 17 மணி நேரம் வரை படித்ததாக ஆர்யன் தெரிவித்துள்ளார். பல நாட்கள் தூக்கத்தைக் கூட தியாகம் செய்து உழைத்ததாக கூறிய அவர், இந்த வெற்றி தனது பயணத்தின் தொடக்கம் மட்டுமே என்றும், மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து புற்றுநோய்க்கு எதிரான சிகிச்சைத் துறையில் பங்களிப்பதே தனது உண்மையான இலக்கு என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அவரது மூத்த சகோதரர் நீட் தேர்வில் 54-வது ரேங்க் பெற்று தற்போது எம்பிபிஎஸ் படித்து வருகிறார். அவரின் சாதனையும் ஆர்யனுக்கு ஊக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. எதிர்காலத்தில் நீட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு, ஆசிரியர்களை முழுமையாக நம்பி, ஒழுக்கத்துடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்று ஆர்யன் அறிவுரை வழங்கியுள்ளார்.
VIDEO | Ludhiana: Punjab’s Aryan Gupta topped the NEET-UG for medical admissions.
He says, “I secured AIR 1, I scored 715 out of 720, my father and mother are doctors… I worked hard, I would not get sleep, but it is feeling surreal now, looking like a dream, everyone is happy,… pic.twitter.com/wwsNL8QNeX
— Press Trust of India (@PTI_News) July 16, 2026