இந்தியா

பாட்டியை துடிதுடிக்க கொலை செய்து, 7 வருட தலைமறைவு வாழ்க்கை.. இறுதியில் குற்றவாளி கைது.. நடந்தது என்ன?..!

Summary:

பாட்டியை துடிதுடிக்க கொலை செய்து, 7 வருட தலைமறைவு வாழ்க்கை.. இறுதியில் குற்றவாளி கைது.. நடந்தது என்ன?..!

இரண்டாவது திருமணத்திற்கு தடையாக இருந்த பாட்டியை கொலை செய்த பேரன், 7 வருட தலைமறைவு வாழ்க்கைக்கு பின்னர், மூன்றாவது திருமணம் செய்து சிக்கிக்கொண்ட பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. 

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை கல்யாண் பகுதியை சார்ந்தவர் பிரதீப் சோனாவனே. இவர் கடந்த ஜூன் 13, 2014 ஆம் வருடம் அவரின் 75 வயது பாட்டியை கொலை செய்து தலைமறைவாகினார். சம்பவ தினத்தில் பாட்டி சசிகலா வாகமரே (வயது 75) வீட்டில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவரது நகைகளும் மாயமாகின. இதனால் தொடக்கத்தில் சசிகலா வாகமரே நகைக்காக மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. 

பின்னர், பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், பிரதீப் சம்பவம் நடைபெறுவதற்கு முந்தைய தினத்தில் இருந்து மாயமானதால் அவர் பாட்டியை கொலை செய்தது அம்பலமானது. தலைமறைவாக வாழ்க்கை நடத்தி வந்தவர், அவ்வப்போது முகநூல் வாயிலாக குடும்ப உறுப்பினர்களை கவனித்தும் வந்துள்ளார். 

விசாரணையில் இறங்கிய போவாய் காவல் அதிகாரிகள், பிரதீப்பை வலைவீசி தேடி வந்தனர். மேலும், இரண்டாவது திருமணம் செய்ய பாட்டி மறுப்பு தெரிவித்ததால் அவர் கொலை செய்யப்பட்டதும் உறுதியானது. முதல் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டுச்சென்ற பிரதீப், இடையில் மற்றொரு திருமணமும் செய்து வாழ்ந்து வந்துள்ளார். கிடைத்த வேலைகளை செய்து குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். இப்படியான சூழலில், காவல் துறையினர் அவரை நெருங்கிவிடவே இரண்டாவது மனைவியையும் விட்டு சென்றதாக தெரியவருகிறது. 

கடந்த 7 வருடமாக காவல் துறையினர் தொடர்ந்து பிரதீப்பை தேடி வந்த நிலையில், அவர் பெயின்டிங் வேலைகள் செய்து வருவது உறுதியானது. மேலும், காவல் துறையினர் தன்னை தேடுகிறார்கள் என்று அறிந்ததும் முகநூல் கணக்கையும் அவர் செயலிழக்க வைத்துள்ளார். ஆனால், அதிகாரிகள் எப்படியோ பிரதீப்பின் சமீபத்திய புகைப்படத்தை சேகரித்துள்ளனர். இதனையடுத்து, காவல் துறையினரும் சரியான திட்டம் தீட்டி, வீட்டில் பெயின்டிங் மற்றும் ஓவியம் வரையும் பணிகள் இருப்பதாக கூறி பிரதீப்பை நேரில் வரவழைத்துள்ளனர்.

மாறுவேடத்தில் தயார் நிலையில் இருந்த அதிகாரிகள், பிரதீப் பணிக்கு என நம்பி வந்ததும் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில், அனைத்து உண்மைகளையும் ஒப்புக்கொண்ட பிரதீப், மூன்றாவது திருமணம் செய்து, அந்த மனைவிக்கும் - தனக்கும் ஒரு குழந்தை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது பிரதீப் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 


Advertisement