ஒவ்வொருவரும் ஒமிக்ரானால் பாதிக்கப்படுவோம் - இந்திய மருத்துவ கவுன்சில் பரபரப்பு எச்சரிக்கை.!
தென்னாபிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனாவின் 3 ஆவது அலையை இந்தியா எதிர்கொண்டுள்ள நிலையில், மொத்த இந்திய ஒமிக்ரான் வகை பாதிப்பு 4,868 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்ச தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஒவ்வொரு நபருக்கும் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று ஏற்படும் என்றும், 80 % நபருக்கு பாதிப்பு இருப்பதே தெரியாது என்றும் தலைமை மருத்துவ நிபுணர் எச்சரித்து இருக்கிறார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் விஞ்ஞான ஆலோசனைக்குழு தலைவர் மருத்துவர் ஜெயப்ரகாஷ் தெரிவிக்கையில், "ஒமிக்ரான் மாறுபாடு என்பது தடுக்க இயலாதது.
அனைவரும் ஒமிக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள். ஒவ்வொருவருக்கும் இது ஏற்படும். ஒமிக்ரான் பாதிப்பை கண்டு அச்சப்படத்தேவையில்லை. டெல்டாவுடன் ஒப்பிடுகையில் ஒமிக்ரான் அதிகளவில் பரவினாலும், அவை பாதிப்பை ஏற்படுத்தாது. உலகளவில் பல நாடுகளுக்கும் ஒமிக்ரான் பரவியுள்ளது.
பெரும்பாலானோருக்கு நோய்தொற்று இருப்பதே தெரியாது. 80 % நபர்களுக்கு பாதிப்பு எப்போது ஏற்பட்டது என்பது கூட தெரியாத வகையில் இருக்கும். தடுப்பூசி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் முன்னரே 85 % மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நோய்த்தொற்றின் இயற்கை நோயெதிர்ப்பு சக்தியானது வாழ்நாள் முழுவதும் இருக்கும். அதனால் பிற நாடுகளை போல இந்தியா பாதிக்கப்படவில்லை" என்று தெரிவித்தார்.