
மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் ஹிஜாப் விவகாரம்!,.15 மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்..!
கர்நாடக மாநிலத்தில், கடந்த பிப்ரவரி மாதம் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
கர்நாடக மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் ஹிஜாப் விவகாரம் பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது. ஹிஜாப் விவகாரத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
கர்நாடக அரசு பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதித்து கல்வி நிர்வாகம் உத்தரவிட்டது. இதுதொடர்பான வழக்கில் கர்நாடக உயர்நீதி மன்றம் அரசின் உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்டது.
ஆனால் உயர்நீதி மன்ற உத்தரவையும் மீறி சில முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளி, கல்லூரிக்கு வந்தனர். சில மாணவிகள் தேர்வு எழுதுவதையும் புறக்கணித்து சென்றனர்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மங்களூரு பல்கலைக்கழகத்திற்கு சில மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்துள்ளனர். அவர்களை, பல்கலைக்கழக நிர்வாகம் உள்ளே அனுமதிக்கவில்லை. ஹிஜாப் அணிந்து வந்ததை கண்டித்து ஏ.பி.வி.பி. மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மங்களூரு வி.வி. அரசு கல்லூரியில் நேற்றும் 15 மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வந்துள்ளனர். ஆனால் நிர்வாகம் அனுமதிக்க மறுத்ததால் அவர்கள் வகுப்பை புறக்கணித்துவிட்டு சென்றனர்.
இதுபற்றி கல்லூரி முதல்வர் டாக்டர் அனுசுயா ராய் தெரிவித்ததாவது:-
கல்லூரியில் 44 முஸ்லிம் மாணவிகள் படிக்கின்றனர். இவர்களில் 15 மாணவிகள் மட்டுமே ஹிஜாப் குறித்து பிரச்சினை எழுப்பி வருகின்றனர். மற்ற மாணவிகள் ஹிஜாப்பை கழற்றிவிட்டு வகுப்பிற்கு வருகின்றனர். இந்த பிரச்சினை தொடர்பாக முடிவெடிக்க ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது என்றார்.
Advertisement
Advertisement