ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டெடுத்த விவகாரம்.. சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு உத்தரவு..!

ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டெடுத்த விவகாரம்.. சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு உத்தரவு!.


gyanvapi-supreme-court-directs-to-protect-shivalingam-a

ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுவது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில்  நடைபெற்று வந்தது.

உத்தரபிரதேசம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து பெண்கள் 5 பேர், வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையில், ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை தாக்கல் செய்ய வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, ஞானவாபி மசூதி வளாகத்தில் கடந்த 14 ஆம் தேதி சனிக்கிழமை வீடியோ ஆய்வு பணிகள் தொடங்கின. கடந்த 16 ஆம் தேதி கடைசி கட்ட வீடியோ பதிவு நடைபெற்றது.

ஆய்வு முற்றிலும் நிறைவடைந்த நிலையில், ஞானவாபி மசூதி வளாகத்தில்  சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. ஆகவே, சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு சீல் வைக்க வேண்டும் என்று வாரணாசி நீதிமன்றம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.

இதன் காரணமாக, ஞானவாபி மசூதிக்குள் ஆட்கள் நுழைய தடை வாரணாசி நீதிமன்றம் தடைவிதித்தது. மசூதிக்குள் வழிபாடு நடத்த ஒரு முறைக்கு 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேலும், அந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து, ஞானவாபி மசூதியில் இஸ்லாமியர்கள் மதவழிபாடு நடத்த விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் எனவும் மசூதிக்குள் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள தடை விதிக்கவும்  கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்ற  நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஞானவாபி மசூதியில் இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கியது.  மேலும் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் பகுதி பாதுகாக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், மசூதிக்குள் வீடியோ ஆய்வு பணிகளை மேற்கொள்ளும் பணிகள் மற்றும் அது குறித்து வாரணாசி நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வழக்கு நாளை மீண்டும் உச்சநீதிமன்றத்தில் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.