தமிழகம் மருத்துவம்

அரசு பள்ளியில் படித்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இடஒதுக்கீடு வழங்குவதை ஏற்கமுடியாது.! நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்.!

Summary:

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது.  இதன் முலம், இந்த ஆண்டு மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பில் 405 அரசுப் பள்ளி மாணவர்கள் பயனடைந்துள்ளனர். புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அமைச்சரவை முடிவு செய்து, அம்மாநில கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

புதுச்சேரியை சேர்ந்த12 ஆம் வகுப்பு மாணவி ஒருவரின் தாயார் மகாலட்சுமி, 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான புதுச்சேரி அரசின் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த மனுவில், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் புதுச்சேரி அரசின் முடிவு தொடர்பான கோப்புகள் உள்துறை அமைச்சகத்தின் பரீசீலனையில் உள்ளது. இது முக்கியமான விவகாரம் என்பதால், இந்த இடஒதுக்கீடு குறித்து மத்திய குடும்ப நல அமைச்சகம், பணியாளர் மற்றும் பயிற்சி துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. 

ஒரே நாடு, ஒரே தகுதி என்ற அடிப்படையில் மருத்துவ படிப்புகளில் தரவரிசை அடிப்படையில், மாணவர்கள் சேர்க்கையை ஊக்கப்படுத்த கடந்த 2016-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் ‘நீட்' தேர்வு கொண்டு வரப்பட்டது. ஆனால் புதுச்சேரியில் கொண்டு வரப்படவுள்ள சட்டம் என்பது நீட் தேர்வின் தகுதியை நீர்த்துப் போகச் செய்யும். தமிழகத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட சட்டம் தொடர்பாக தங்களது கவனத்துக்கு கொண்டு வரப்பட வில்லை என அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசின் சட்டம் குறித்து முடிவு செய்ய 6 வார கால அவகாசம் வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது .இந்த வழக்கு விசாரணையின்போது, மனுதார்ர் தரப்பில ஆஜரான வழக்கறிஞர் இது மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் நடவடிக்கை. அரசு பள்ளி மாணவர்களை கொச்சைப்படுத்தும் நடவடிக்கை என தெரிவித்தார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி இதுதொடர்பாக 4 வாரத்துக்குள் முடிவெடுத்து உரிய பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.


Advertisement