மெழுகு, டார்ச் லைட் வெளிச்சத்தில் பிரசவம்.. பவர் கட்டால் அரசு மருத்துவமனையில் பரிதாபம்.!
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் மாவட்டம், நரிஸ்பட்னம் அரசு மருத்துவமனையில் பெண்மணியொருவர் பிரசவத்திற்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவின் போது பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், அப்போது திடீரென மின்தடையும் ஏற்பட்டுள்ளது.
அம்மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே அதிகளவு மின்தடை ஏற்பட்டு வரும் நிலையில், அதனால் மருத்துவமனையில் இருந்த ஜெனரேட்டரும் தொடர்ந்து இயங்கி பழுதாகியுள்ளது. இந்த நிலையில், பெண்ணுக்கு இரவு நேரத்தில் பிரசவ வலி ஏற்பட, பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பிரசவம் பார்க்க தொடங்கியுள்ளனர்.
மேலும், பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களிடம் செல்போனை வாங்கி, அதில் உள்ள டார்ச் வெளிச்சத்தில் பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. இதனால் தனது மனைவிக்கு என்னாகுமோ, குழந்தைக்கு என்னாகுமோ என்று கணவர் மற்றும் பெண்ணின் உறவினர்கள் பரிதவித்துப் போயுள்ளனர். ஆனால், சுகப்பிரசவத்தில் குழந்தை சிரமம் இன்றி பிறந்துள்ளது.
அரசு மருத்துவமனையில் இருந்த குறைபாடு மற்றும் அதனால் பெண்ணுக்கு மெழுகு, டார்ச் வெளிச்சத்தில் பிரசவம் பார்த்த சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது.