குடியுரிமை திருத்த சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்துவதில் உறுதி.! அமித்ஷா
மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான அமித்ஷா 2 நாள் பயணமாக மேற்கு வங்காள மாநிலத்துக்கு சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அமித்ஷா, குடியுரிமை திருத்த சட்டம் நிச்சயம் அமல்படுத்தப்படும். அதை அமல்படுத்துவதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நாங்கள் வலிமையான மேற்கு வங்கத்தை உருவாக்க லட்சியம் கொண்டுள்ளோம். ஆனால், தன் உறவினரை முதல்வராக்கும் முயற்சியில், மம்தா ஈடுபட்டுள்ளார். கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 18 தொகுதிகளை கைப்பற்றினோம். அதேபோன்று, அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் குறைந்தபட்சம் 200 தொகுதிகளை வெற்றிபெற இலக்கு நிர்ணயித்துள்ளோம் என தெரிவித்தார்.
மேற்கு வங்காளத்தில் ஆட்சியை கைப்பற்ற முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை எதிர்த்தால் மட்டும் பலன் கிடைக்காது. மக்களின் மனங்களை வெல்ல வேண்டும். சாதாரண மக்களுக்காக மத்திய அரசு தொடங்கிய திட்டங்களை நிர்வாகிகள் பிரசாரம் செய்ய வேண்டும். கவர்னரை, முதல்வர் மம்தா விமர்சிப்பது ஏற்கத்தக்கதல்ல என தெரிவித்தார்.