கூரியர் நிறுவனம் போல் நாடகமாடி; பெண்ணை ஏமாற்றி 7 லட்சம் பணம் பறித்த மோசடி கும்பல்..!!

கூரியர் நிறுவனம் போல் நாடகமாடி; பெண்ணை ஏமாற்றி 7 லட்சம் பணம் பறித்த மோசடி கும்பல்..!!



Acting like a courier company; Fraud gang cheated the woman and took 7 lakh money..

கூரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவது போல் பேசி, நீங்கள் அனுப்பிய பார்சலில் போதை பொருள் உள்ளது எனக் கூறி பெண்ணை ஏமாற்றி ஏழு லட்சம் பணம் பறித்த மோசடி கும்பல்.

ஹரியானா மாநிலம் குருகுராமில் வசித்து வருகிறார் பிராச்சி தேக் என்ற பெண்மணி. இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் கூரியர் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை நிர்வாகி பேசுவதாக சொல்லி ஒருவர் போன் செய்துள்ளார்.

அப்போது அந்த பெண்ணிடம் நீங்கள் வெளிநாட்டுக்கு ஒரு பார்சல் அனுப்பி இருக்கிறீர்கள். அந்த பார்சலில் இரண்டு பாஸ்போர்ட்கள் 5 ஏடிஎம் கார்டுகள் மற்றும் 300 கிராம் போதைப்பொருள், ஒரு லேப்டாப் இருக்கிறது என்றும், பார்சலில் போதை பொருள் இருப்பதால், அந்த பார்சலை நாங்கள் நிராகரித்து விட்டோம் என அந்த நபர் கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து காவல்துறையினரிடம் தகவல் அளிக்கப் போவதாக கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரச்சி தேக் என்ற அந்த பெண், நான் யாருக்கும் பார்சல் அனுப்பவில்லை என்று கூறியுள்ளார்.

ஆனால் கூரியர் நிறுவன ஊழியர் என்று பேசிய பேசியவர் அந்த பெண்ணிடம், நீங்கள் அந்த பார்சலை அனுப்பவில்லை என்றால் உங்கள் ஆதார் கார்டை வேறு யாராவது தவறாக பயன்படுத்தி அனுப்பி இருக்க கூடும் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த விவகாரத்தில் உங்களுக்கு தொடர்பு இல்லை என்று நிரூபிக்க, நாங்கள் உதவ தயாராக இருக்கின்றோம். போலீசில் உங்களுக்கு சாதகமாக பேசி சரி செய்கிறோம் என்று அந்த நபர் கூறியுள்ளார்.  சிறிது நேரத்தில் மும்பை காவல் துறையிலிருந்து பேசுவதாக அந்தப் பெண்ணின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. 

அந்த அழைப்பில் அந்த பெண்ணை விசாரிப்பது போல் பேசிவிட்டு போனை வைத்துள்ளனர். இதை தொடர்ந்து மீண்டும் அந்த பெண்ணிற்கு ஃபோன் செய்த அந்த நபர் இந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்றால் ரிசர்வ் வங்கிக்கு ரூ.95,499 ரூபாய் பணம் கட்ட வேண்டும் என்று சொல்லியுள்ளார்.

எனவே, ஆன்லைன் மூலமாக பணம் அனுப்ப சொல்லியுள்ளார். இதை தொடர்ந்து பல காரணங்களை சொல்லி அந்த பெண்ணிடம் மொத்தம் ரூ.6,93,437 பணம் வாங்கியுள்ளனர். அதன் பின்னர் பிராச்சி தேக் என்ற அந்த பெண் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார்.

இதைத் தொடர்ந்து சைபர் கிரைமில் கடந்த வெள்ளிக் கிழமையன்று இது குறித்து புகார் அளித்துள்ளார். புகாரைத் தொடர்ந்து மோசடி செய்த நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.