
nadodikal 2 release
நேற்று (31/01/2020) வெளியாகவிருந்த நிலையில், நாடோடிகள்- 2 திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நடிகர் சசிகுமார், நடிகை அஞ்சலி ஆகியோர் நடிப்பில், இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் நாடோடிகள்- 2 திரைப்படத்தை தயாரிப்பாளர் நந்தகுமார் தயாரித்துள்ளார்.
இந்த படத்திற்கு தடை விதிக்க கோரி எப்.எம்.பைனான்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், நாடோடிகள் படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால், பட தயாரிப்பு செலவுகளுக்காக, தன்னிடம் படத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உரிமையை அளிப்பதாக 5 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், பல தவணைகளாக, 3 கோடியே 50 லட்சம் பணம் தயாரிப்பாளருக்கு வழங்கிய நிலையில் வேறு நிறுவனம் மூலமாக படத்தை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெளியிட தயாரிப்பாளர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இதனால் எனக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. படத்தின் உரிமை தனக்கே சொந்தமானது என அறிவிக்க வேண்டும். அதுவரை படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், அந்த மனுவை விசாரித்த நீதிபதி, திரையரங்குகளில் படத்தை நேற்று வெளியிடுவதற்க்கு தடை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தயாரிப்பாளர் நந்தகோபால் சார்பில் நேற்று நீதிபதி முன்பு அவசர முறையீடு செய்யப்பட்டது.
அதில் தயாரிப்பாளர் சார்பில் கொடுக்க வேண்டிய தொகையில் பாதி தொகையை அளிப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி படத்தை வெளியிட விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி படத்தை வெளியிடலாம் என்று இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளார்.
Advertisement
Advertisement