சினிமா

விஸ்வாசம்: இடைவேளைக்கு பிறகு எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்; ஆனால்?

Summary:

about viswasam movie

இயக்குனர் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக கூட்டணி சேர்ந்து நடித்துள்ளார் தல அஜித். வீரம், வேதாளம், விவேகம், தற்போது விஸ்வாசம். பொங்கலை முன்னிட்டு கடந்த வியாழனன்று வெளியான விஸ்வாசம் திரைப்படம் நான்காவது நாளாக இன்றும் முழு ரசிகர்கள் கூட்டத்துடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த பொங்கலை குடும்பத்துடன் திரையரங்கில் கொண்டாடுவதற்கு ஏற்றவாறு சரியான நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளது விஸ்வாசம் என்றே சொல்ல வேண்டும்.

எந்த ஒரு நடிகரின் ரசிகனாக இல்லாமல் ஒரு பொதுப்படையான சினிமா ரசிகனாக விஸ்வாசம் பற்றிய கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன்

நள்ளிரவு காட்சிகளைக்கூட குடும்பம் குடும்பமாக வந்து படத்தை ரசித்து வருகின்றனர். கிராமத்து மக்களையும், குடும்பத்தின் மீது அதிகப் பாசம் கொண்டவர்களையும் இந்த படம் வெகுவாக கவர்ந்துள்ளது. இத்தனை நாட்கள் சொந்த பந்தங்களை பற்றி நினைக்காத பலருக்கும் தன் சொந்தங்களை சந்திக்க வேண்டும் என்ற உணர்வை இந்த படத்தின் முதல் பகுதி நிச்சயம் கொடுக்கும். திருவிழாக்கள் வெறும் சாமி வழிபாடு அல்ல, பிரிந்து கிடைக்கும் சொந்தபந்தங்களை இணைக்கும் பாலம் என்பதை தெளிவாக அஜித் விளக்கும் காட்சி நமது கிராமத்து திருவிழாக்களை கண்முன்னே கொண்டுவருகிறது.

படத்தில் அஜித்தை அறிமுகம் செய்யும் காட்சியை இயக்குனர் சிவா மிகவும் பிரமிப்புடன் துல்லியமாக பதிவு செய்துள்ளார் என்றே கூற வேண்டும். அந்த கம்பீர நடை, முறுக்குவிசை, வெள்ளை வேட்டி, சட்டை இவற்றைப் பார்த்தால் திரையரங்கில் அமர்ந்திருக்கும் நமக்கும் எழுந்து நிற்க வேண்டும் என்ற உணர்வு உண்டாகிறது. நயன்தாராவை சந்திக்கும் காட்சிகளும் திருமணம் பற்றிய பேச்சுக்களும் படத்தின் முதல் பாதிக்கும் மிகவும் முக்கியமான காட்சிகள் தான். ஆனால் அதற்கு இடையில் வரும் பல காட்சிகள் கொஞ்சம் காமெடியாக இருந்தாலும் கதைக்கு சம்மந்தம் இல்லாமல் நேரத்தை பூர்த்திசெய்யவே அமைக்கப்பட்டுள்ளன என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

ஆனால் முதல் பாதியில் அத்தனை தேவையில்லாத காட்சிகளையும் அடுத்த அரை மணி நேரத்திலேயே நம்மை மறக்க வைத்து விட்டது அஜித்தின் நடிப்பும் இயக்குனரின் நேர்த்தியும். பாசத்திற்காக ஏங்கும் அஜித்தின் நடிப்பு பார்ப்போரின் கண்களில் கண்ணீர் வர வைக்கிறது. படத்தில் கண்ணான கண்ணே பாடலை சரியான இடத்தில் அமைத்து உள்ளார் இயக்குனர். அஜித்தின் ஒட்டுமொத்த ஏக்கத்தையும் அந்த பாடல் வரிகள் காட்டுகின்றன. அதே நேரத்தில் ரசிகர்களை உற்சாகமூட்ட காமெடி நடிகர் விவேக்கை பயன்படுத்திய விதம் பாராட்டத்தக்கது. 

இரண்டாம் பாதியில் கொஞ்சம் கூட ரசிகர்களின் சிந்தனை சிதறிவிடாமல் சரியான இடங்களில் காமெடி, ஆக்சன், சென்டிமென்ட் என அனைத்தையும் நேர்த்தியாக கையாண்டுள்ளார் இயக்குனர். நயன்தாராவின் கட்டுப்பாடான நடிப்பு படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது மேலும் இமானின் பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்றார்போல் கச்சிதமாக அமைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும். 

நிச்சயம் படத்தின் இரண்டாம் பாதியை அஜித் ரசிகனாக மட்டுமல்லாமல், ஒரு சினிமா ரசிகனாகவும், ஒரு தந்தையாகவும், பாசத்திற்காக ஏங்கும் ஒரு சாதாரண மனிதனாகவும் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். இந்தக்காலகட்டத்தில் கண்டிப்பாக அனைவரும் திரையரங்கிற்கு குடும்பத்துடன் சென்று பார்த்து ரசிக்க வேண்டிய தரமான படம் விஸ்வாசம் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.


Advertisement