5 நாளில் அபேஸ் ஆன 5 லட்சம் கோடி ரூபாய்: தலையில் கை வைத்த சில்லறை முதலீட்டாளர்கள்..!

5 நாளில் அபேஸ் ஆன 5 லட்சம் கோடி ரூபாய்: தலையில் கை வைத்த சில்லறை முதலீட்டாளர்கள்..!



indian-stock-markets-fell-sharply-today-for-the-5th-day

தொடர்ச்சியாக 5வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் இன்றும் கடும் வீழ்ச்சியை சந்தித்தது முதலீட்டாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து 5வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் இன்றும் கடும் வீழ்ச்சியை சந்தித்தது வருகிறது. சென்செக்ஸ் 1,046 புள்ளிகளும், நிஃப்டி 331 புள்ளிகளும் சரிவுடன் இன்றைய பங்குச்சந்தை வர்தகம் நிறைவடைந்தது. உலகளாவிய பணவீக்கத்தின் தாக்கம், கடந்த ஒருவாரமாகவே பங்குச்சந்தைகளை ஆட்டம் காட்டி வருகிறது.

இன்றைய வர்த்தக நேரத்தின் தொடக்க்கத்தில் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின. கடந்த நான்கு நாட்களாக சரிவுடன் முடிவடைந்ததால், சோகத்தில் இருந்த முதலீட்டாளர்களுக்கு இந்த ஏற்றம் ஆறுதலாக அமைந்தது. ஆனால் பிற்பகுதியில், குரங்கின் பிடியில் சிக்கிய பூமாலை போன்று பங்குச்சந்தைகள் கடும் சரிவை கண்டன.

இன்றைய பங்கு வர்த்தக நேரம் முடிவடைந்த நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,046புள்ளிகளை இழந்து 51,479 புள்ளிகளில் நிறைவு பெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்  நிஃப்டி, 331 புள்ளிகள் குறைந்து, 15,360 புள்ளிகளில் நிறைவு பெற்றது.

தேசிய பங்குச்சந்தை, கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அனைத்து துறை பங்குகளின் மதிப்பும் சரிவடைந்தன. உலோக பங்குகள் மோசமான வீழ்ச்சியை சந்தித்தன. வேதாந்தா நிறுவன பங்குகள் 8 சதவீதமும், ஹிண்டல்கோ பங்குகள் 7 சதவீதமும் சரிவை கண்டன.

மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள  3,375 நிறுவனத்தின் பங்குகளில், 2,632 நிறுவன பங்குகள் இழப்பை சந்தித்தன. இதனால் மும்பை பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களின் மூலதன சந்தை மதிப்பு 5 லட்சம் கோடி ரூபாய் குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு பணவீக்கம், உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, வங்கி கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்வு , அன்னிய முதலீட்டாளர்கள் வெளியேற்றம் என பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், இதுவரையிலும் வீழ்ச்சியை தடுத்து வந்த உள்நாட்டு சில்லறை முதலீட்டாளர்களின் போக்கு மாறியுள்ளது முக்கிய காரணம் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறியுள்ளனர்.