புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
திரும்பி பார்க்கலாம் வாங்க: ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இதுவரை - ஒரு புள்ளிவிவரம்!!
ஆசிய கண்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் இணைந்து நடத்தும் தொடர் தான் ஆசிய கிரிக்கெட் தொடர். ஆசிய கண்டத்தில் யார் வலுவான அணி என்பதை நிரூபிக்க இந்த தொடரானது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. சில சமயங்களில் ஒரு சில காரணங்களால் இரண்டு ஆண்டுகளில் நடத்த முடியாமலும் போனது.
முதலாவது தொடர்: 1984
ஐக்கிய அரபு அமீரகத்தில் சார்ஜா நகரில் 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 13 வரை நடைபெற்றது. இந்தியா, பாகிஸ்தான், மற்றும் இலங்கை ஆகிய அணிகள் மட்டும் இந்த முதல் தொடரில் பங்கு பெற்றன.
ரவுண்ட் ராபின் முறைப்படி நடைபெற்ற இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்றைய அணிகளுடன் ஒரு முறை மட்டும் ஆடின. இந்தியா இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று, முதலாவது ஆசியக் கோப்பையை வென்றது. இலங்கை இரண்டாவது இடத்தில் வந்தது. பாகிஸ்தான் இந்த தொடரில் இரண்டு போட்டிகளிலும் தோற்றது.
இரண்டாவது தொடர்: 1986
இலங்கையில் 1986 ஆம் ஆண்டில் மார்ச் 30 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெற்ற இத்தொடரில் வங்காள தேசம், பாகிஸ்தான், மற்றும் இலங்கை ஆகிய அணிகள் பங்கு பெற்றன. இலங்கை இனப்பிரச்சினையைக் காரணம் காட்டி இந்திய அணி இத்தொடரில் பங்குபற்றவில்லை.
இத்தொடரின் போட்டிகள் ரவுண்ட் ராபின் முறையில் இடம்பெற்றன. ஒவ்வொரு அணியும் ஒரு முறை மற்றைய இரு அணிகளுடனும் ஒரு முறை மோதின. அதிக புள்ளிகளைப் பெற்ற பாகிஸ்தான் அணி இரண்டாம் இடத்தில் வந்த இலங்கை அணியுடன் இறுதிப் போட்டியில் மோதியது. இலங்கை அணி வெற்றி பெற்று ஆசியக் கிண்ணத்தை முதற் தடவையாகப் பெற்றுக் கொண்டது.
மூன்றாவது தொடர்: 1988
வங்காள தேசத்தில் 1988 ஆம் ஆண்டு அக்டோபர் 26 முதல் நவம்பர் 4 வரை நடைபெற்றது. வங்காள தேசம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நான்கு அணிகள் இத்தொடரில் பங்குபெற்றன.
இத்தொடரின் முதற் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்றைய அணிகளுடன் தனித்தனியே ஒரு முறை மோதின. இவற்றில் முதல் இரண்டு இடம் பிடித்த இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிச் சுற்றில் விளையாடின. இறுதி போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆசியக் கோப்பையை கைப்பற்றியது.
நான்காவது தொடர்: 1990-1991
இந்த தொடரானது 1990 டிசம்பர் 25 முதல் 1991 ஜனவரி 4 வரை முதல் முறையாக இந்தியாவில் இடம்பெற்றது. வங்காள தேசம், இந்தியா, இலங்கை ஆகிய மூன்று அணிகள் இப்போட்டித் தொடரில் பங்கேற்றன. பாகிஸ்தான் அணி அரசியல் காரணங்களுக்காக இத்தொடரில் பங்குபெறவில்லை.
இத்தொடரின் போட்டிகள் ரவுண்ட் ராபின் முறையில் இடம்பெற்றன. ஒவ்வொரு அணியும் ஒரு முறை மற்றைய இரு அணிகளுடனும் ஒரு முறை மோதின. அவற்றில் முதலிரண்டு இடங்களை பிடித்த அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின. இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கையை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று மூன்றாவது முறையாக ஆசியக் கோப்பையை தனதாக்கிக் கொண்டது.
ஐந்தாவது தொடர்: 1995
இந்த தொடர் 1995 ஆம் ஆண்டில் ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 13 வரை சார்ஜாவில் நடைபெற்றது. வங்காள தேசம், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் இப்போட்டித் தொடரில் பங்கேற்றன.
ரவுண்ட் ராபின் முறையில் நடந்த இச்சுற்றில் ஒவ்வோர் அணியும் மற்றைய அணியுடன் ஒரு முறை ஆடியது. அவற்றில் முதலிரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின. முதற் சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய மூன்று அணிகளும் தலா நான்கு புள்ளிகளைப் பெற்றன. ஆனாலும் இந்தியா, இலங்கை அணிகள் அதிக ரன் விகித அடிப்படையில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. இறுதிப் போட்டியில் இந்திய அனி, இலங்கையை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று நான்காவது தடவையாக (தொடர்ந்து மூன்று முறை) ஆசியக் கோப்பையை கைப்பற்றியது.
ஆறாவது தொடர்: 1997
இலங்கையில் 1997 ஆம் ஆண்டில் ஜூலை 14 முதல் ஜூலை 26 வரையில் நடைபெற்றது. வங்காள தேசம், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் இப்போட்டித் தொடரில் பங்கேற்றன.
ரவுண்ட் ராபின் முறையில் நடந்த இச்சுற்றில் முடிவில் இந்தியா, இலங்கை அணிகள் இறுதிப் போட்டிக்குத் தெரிவாயின. இறுதிப் போட்டியில் இலங்கை அணி, இந்திய அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று இரண்டாவது முறையாக ஆசியக் கோப்பையை வென்று இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
ஏழாவது தொடர்: 2000
2000 ஆம் ஆண்டு மே 29 முதல் ஜூன் 7 வரை வங்காளதேசத்தில் நடைபெற்றன. வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நான்கு அணிகள் இத்தொடரில் பங்குபெற்றன. இத்தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 39 ஓட்டங்களால் இலங்கை அணியைத் தோற்கடித்து ஆசியக் கிண்ணத்தை முதல் முறையாக கைப்பற்றியது. இந்த தொடரில் இந்திய அணி ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டும் வெற்றி பெற்றது.
எட்டாவது தொடர்: 2004
இலங்கையில் 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 முதல் ஆகஸ்ட் 1 வரை இடம்பெற்றது. வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஹாங்காங், அமீரகம் ஆகிய ஆறு அணிகள் இத்தொடரில் பங்குபெற்றன.
இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இந்த தொடரில் வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறின. இரண்டாவது சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதின. இதில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். இறுதிப்போட்டியில் இலங்கை அணி 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி மூன்றாவது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றியது.
ஒன்பதாவது தொடர்: 2008
பாகிஸ்தானில் 2008 ஆம் ஆண்டு ஜூன் 24 முதல் ஜூலை 6 வரை நடைபெற்றன. வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஹாங்காங், அமீரகம் ஆகிய ஆறு அணிகள் இத்தொடரில் பங்குபெற்றன. பாகிஸ்தானில் நடைபெற்ற முதலாவது ஆசிய கோப்பை தொடர் இதுவே ஆகும்.
இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இந்த தொடரில் வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதிய இந்த சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை தலா இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றன. பின்னர் ரன் விகித அடிப்படையில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறின. இறுதிப்போட்டியில் இலங்கை அணி 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி நான்காவது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றியது.
பத்தாவது தொடர்: 2010
2010 ஆம் ஆண்டு சூன் 15 முதல் சூன் 24 வரை இலங்கையில் நடைபெற்றன. வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நான்கு அணிகள் இத்தொடரில் பங்குபெற்றன. இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை 81 ஓட்டங்களால் வென்று 5வது முறையாக நீண்ட இடைவேளைக்கு பிறகு ஆசியக் கோப்பையை வென்றது. தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்தார்.
பதினோராவது தொடர்: 2012
2012 ஆம் ஆண்டு மார்ச் 11 முதல் மார்ச் 22 வரை வங்காளதேசத்தில் நடைபெற்றன. வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நான்கு அணிகள் இத்தொடரில் பங்குபெற்றன. இந்த தொடரில் முதல் சுற்றிலேயே இந்தியா மற்றும் இலங்கை அணிகள் வெளியேறின. இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதின.
இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி வங்காளதேச அணியை 2 ஓட்டங்களால் வென்று 2வது முறையாக நீண்ட இடைவேளைக்கு பிறகு ஆசியக் கோப்பையை வென்றது.
பன்னிரண்டாவது தொடர்: 2014
2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 முதல் மார்ச் 8 வரை வங்காளதேசத்தில் நடைபெற்றது. வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானித்தான் ஆகிய ஐந்து அணிகள் இத்தொடரில் பங்குபெற்றன. ஆப்கானித்தான் அணி முதல் முறையாக ஆசிய கோப்பை தொடரில் கலந்து கொண்டது.
இந்த தொடரின் முதல் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இறுதிப்போட்டியில் இலங்கை அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வென்று ஐந்தாவது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றியது.
பதிமூன்றாவது தொடர்: 2016
2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 முதல் மார்ச் 6 வரை வங்காளதேசத்தில் நடைபெற்றது. வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, அமீரகம் ஆகிய ஐந்து அணிகள் இத்தொடரில் பங்குபெற்றன. இந்த தொடர்நது T20 முறையில் நடைபெற்றது.
இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேசம் அணியை வென்று ஆறாவது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றியது.
பதினான்காவது தொடர்: 2018
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பைக்கான 14ஆவது ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றன.
இன்று நடைபெறும் பரபரப்பான இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி ஏழாவது முறையாக ஆசிய கோப்பையை வெல்லுமா அல்லது கடந்த ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த வங்காளதேசம் அணி பழி தீர்த்துக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.