புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
ஆசியா கோப்பை: வலுவான நிலையில் ஹாங்காங்; கேள்விக்குறியாகும் இந்தியாவின் வெற்றி??
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஹாங்காங் வெற்றிக்கு 286 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. டாஸ் வென்ற ஹாங்காங் அணி கேப்டன் அன்ஷுமன் ராத் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ரோகித் சர்மா, ஷிகர் தவான் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
அவர்கள் ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை எனினும் தவான் ஒரு பக்கம் பொறுமையாக ஆதி அரைசதம் அடித்தார். பிறகு வந்த ராயுடுவும் பொறுமையாக ஆடி அடித்து அரைசதம் கடந்தார். இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்த நிலையில் இந்தியாவின் ஸ்கோர் 29.2 ஓவரில் 161 ரன்கள் எடுத்திருக்கும்போது அம்பதி ராயுடு 70 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு தவான் – அம்பதி ராயுடு ஜோடி 116 ரன்கள் சேர்த்தது.
அதிரடியாக ஆடிய தவான் 127 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவர் 120 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களை விளாசினார். இவரைத் தொடர்ந்து வந்த முன்னாள் கேப்டன் தோனி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறியது ரசிகர்களை பெரிதும் ஏமாற்றம் அடையச் செய்தது. அவரைத் தொடர்ந்து தினேஷ் கார்த்திக் 33 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 285 ரன்களை எடுத்து 7 விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியின் கேதர் ஜாதவ் கடைசி வரை அவுட் ஆகாமல் 28 ரன்கள் எடுத்திருந்தார். ஹாங்காங் அணியின் இஷான் கான் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்திருந்தார்.
286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹாங்காங் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக நிசாகத் கான் மற்றும் அந்த அணியின் கேப்டன் அன்ஷுமன் ராத் களமிறங்கினர். ஹாங்காங் அணியை எளிதில் முடித்துவிடலாம் என்று எண்ணிய இந்திய பந்துவீச்சாளர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை அடித்து நொறுக்கி வருகின்றனர்.
25 ஓவர்கள் நிறைவு பெற்ற நிலையில் ஹாங்காங் அணி 130 ரன்கள் எடுத்து விக்கெட் எதுவும் இழக்காமல் ஆடி வருகிறது. அந்த அணியின் நிசாகத் கான் அரை சதம் விளாசினார். இவர் 85 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார் இவர் 10 பவுண்டரிகள், ஒரு சிக்சர் விளாசிய உள்ளார். மற்றொரு துவக்க ஆட்டக்காரரான அன்ஷுமன் ராத் 70 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.
இந்தியா இந்த ஆட்டத்தில் எளிதில் வென்றுவிடும் என்று எண்ணிய ரசிகர்களுக்கு இது மிகவும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களை கூட ஆட்டமிழக்க செய்யமுடியாமல் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் பந்துவீச்சாளர்களும் திணறி வருகின்றனர். ரோகித் சர்மா பந்துவீச்சாளர்களை மாற்றி மாற்றி பயன்படுத்திய போதிலும் அதில் எந்தவித பயனும் அளிக்கவில்லை.
இந்நிலையில் இன்னும் 25 ஓவர்களில் 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹாங்காங் அணி ஆடி வருகிறது. இப்போது இருக்கும் நிலையில் இந்திய அணியின் வெற்றி கேள்விக்குறியாகவே உள்ளது.