நேபாள பனிப்பாறை ஏரி உடைப்பு... இமயமலையில் நடந்தது என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்..!!!
நேபாள பனிப்பாறை ஏரி உடைப்பு வெள்ளத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள், கட்டமைப்பு சேதங்கள் குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட பனிப்பாறை ஏரி உடைப்பு வெள்ளம் பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், சுற்றுலா சென்ற தமிழர்கள் உள்ளிட்ட பல இந்தியர்கள் அங்கு சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க இந்திய, தமிழக அரசுகள் அவசர உதவி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட இந்த பேரழிவு குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் கவலை தெரிவித்துள்ளார். இயற்கை சீற்றத்துடன், அப்பகுதியின் புவியியல் தன்மையை கருத்தில் கொள்ளாமல் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களும் சேதத்தை அதிகரித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாலங்கள், சாலைகள், நீர்மின் நிலையங்கள் சேதம்
வெள்ளத்தின் தாக்கத்தில் 19 முக்கியப் பாலங்கள் நொறுங்கியுள்ளன. சுமார் 40 கிலோமீட்டர் நீளத்திலான சாலைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மேலும், 13 நீர்மின் நிலையங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன.
காலத்தால் இளமையான இமயமலைத் தொடரின் புவியியல் அமைப்பை முழுமையாக கணக்கில் கொள்ளாமல் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டதே இத்தகைய பாதிப்புகளுக்கு முக்கிய காரணம் என சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளின் மலைப்பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட கட்டுமான முறைகளை இமயமலையிலும் அப்படியே பின்பற்றியதன் விளைவுகளை தற்போது பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப மாற வேண்டிய கட்டமைப்புகள்
மனித நடவடிக்கைகளால் தூண்டப்படும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பழைய பொறியியல் அணுகுமுறைகளை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மாறிவரும் தீவிர வானிலை நிலைகளை தாங்கும் வகையில் உள்கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என சூழலியல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
எதிர்காலத்தில் இதுபோன்ற பேரழிவுகளால் ஏற்படும் உயிரிழப்புகளையும் சேதங்களையும் குறைக்க காலநிலை மாற்றத்தைத் தாங்கும் உள்கட்டமைப்புகள் அவசரமாக உருவாக்கப்பட வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் அமைப்புகளின் கோரிக்கையாக உள்ளது. இயற்கையின் தன்மையை புறக்கணித்து மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள் எதிர்காலத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் சுந்தர்ராஜன் எச்சரித்துள்ளார்.
நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.