அதிர்ச்சி! இமயமலை பனிப்பாறை சரிவால் தான் நேபாளத்தில் பெரு வெள்ளம்! 19 பாலங்கள், கார்கள், வீடுகள் அடித்து செல்லும் காட்சி... நேபாள போலீஸ் வெளியிட்ட வெள்ள பாதிப்பு காட்சிகள்!!!
நேபாள இமயமலையில் பனிப்பாறை சரிந்து ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். 384 வெளிநாட்டினர் உள்ளிட்ட பலர் மாயமாகியுள்ள நிலையில் மீட்புப் பணி தீவிரமடைந்துள்ளது.
நேபாளத்தின் வடக்குப் பகுதியில் திபெத் எல்லைக்கு அருகே இமயமலையில் ஏற்பட்ட திடீர் பனிப்பாறை சரிவால் லெண்டே ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிராமங்களுக்குள் புகுந்த வெள்ளத்தில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். 40 பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட ஏராளமானோர் மாயமாகியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகள், பாலங்கள்
இமயமலையில் உடைந்த பனிப்பாறை லெண்டே ஆற்றில் விழுந்ததையடுத்து திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது. வெள்ளநீர் கிராமங்களுக்குள் புகுந்ததில் ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளும் கடுமையாக சேதமடைந்துள்ளன.
சியாப்ரு மற்றும் திமுரே பகுதிகளில் வானிலை தொடர்ந்து மோசமாக உள்ளது. இதனால் மீட்பு ஹெலிகாப்டர்களை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகளில் இதனால் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் மற்றும் ஆற்றங்கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நேபாள பிரதமர் பாலேந்திர ஷா அறிவுறுத்தியுள்ளார்.
384 வெளிநாட்டினர் மாயம்; தமிழக யாத்திரிகர்களும் சிக்கினர்
பெருவெள்ளத்தில் 384 வெளிநாட்டினர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களில் 105 பேர் இந்தியர்கள். மலேசியாவைச் சேர்ந்த 17 பேர், பிரிட்டனைச் சேர்ந்த 12 பேர், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 4 பேர், அமெரிக்காவைச் சேர்ந்த 3 பேர், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்தைச் சேர்ந்த தலா ஒருவர் உள்ளனர். மற்றவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது இன்னும் தெரியவில்லை.
கைலாஷ் யாத்திரைக்காக சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 57 பேரும் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இவர்களில் ஒரு பேருந்தில் பயணம் செய்த 22 பேர் மட்டும் இதுவரை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாயமான மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
40 கி.மீ. சாலைகள் சேதம்;
வெள்ளத்தின் வேகம் காரணமாக 19 பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. சுமார் 40 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலைகளும் சேதமடைந்துள்ளன. மேலும் 13 மின் திட்டங்கள் மற்றும் 200 கனரக வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வெள்ளத்தின் பாதிப்புகளை காட்டும் காட்சிகளை நேபாள போலீசார் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை நாளை விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக இந்திய தூதரக அதிகாரிகள் நேபாள அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், காணாமல் போனவர்களின் நிலை குறித்து அதிகாரிகள் தொடர்ந்து தகவல்களை சேகரித்து வருகின்றனர்.