எப்ப பாரு நகையை காட்டி வீடியோ போட்டாங்க...! பிரபல பெண் யூடியூபர் வீட்டில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கொள்ளையர்கள்! பரபரப்பு வாக்குமூலம்...!!!
நாகர்கோவில் அருகே யூடியூபர் வீட்டில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், சமூக வலைதள வீடியோக்கள் மூலம் தகவல் கசிந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
நாகர்கோவில் அருகே யூடியூபர் தம்பதியின் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வைர நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். புகாரைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி மூன்று பேரை கைது செய்துள்ளனர். சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களில் காட்டப்பட்ட நகைகள் மற்றும் பணத்தை அடிப்படையாக வைத்து கொள்ளைக்கு திட்டமிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்பக்கக் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணம் பகுதியில் யூடியூபர் தம்பதியான மதுமிதா, வினோத்குமார் வசித்து வருகின்றனர். இரு தினங்களுக்கு முன்பு இவர்களின் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், பீரோவை உடைத்துள்ளனர்.
அதில் வைத்திருந்த 118 பவுனுக்கும் அதிகமான தங்கம் மற்றும் வைர நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
சிசிடிவி, கைரேகை மூலம் போலீசார் விசாரணை
புகாரைத் தொடர்ந்து தனிப்படை அமைத்த போலீசார், சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் மற்றும் அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த இசக்கிபாண்டி (30) சிக்கினார்.
அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் முருகன், முருகேசன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளும் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Instagram வீடியோக்களை பார்த்து கொள்ளைக்கு திட்டம்
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மதுமிதா Instagram-ல் வெளியிட்ட வீடியோக்கள் குறித்து முக்கிய தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. அந்த வீடியோக்களில் வீட்டின் உட்புற அமைப்பு, அதிகளவிலான நகைகள் மற்றும் பணம் ஆகியவை வெளிப்படையாக இடம்பெற்றிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனை கவனித்த கொள்ளையர்கள், அந்த வீட்டில் அதிக மதிப்புள்ள பொருட்கள் இருப்பதாக கணித்து கொள்ளைக்கு திட்டமிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சமூக வலைதளங்களில் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் விலை உயர்ந்த பொருட்களை அதிகமாகக் காட்சிப்படுத்தும்போது, அது எதிர்பாராத வகையில் குற்றவாளிகளுக்கு தகவலாக மாறக்கூடும் என்பதையும் இந்த வழக்கு வெளிப்படுத்தியுள்ளது.