வேலை முடிந்து வரும்போது நடந்த கொடூரம்! சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அரசு பேருந்து கண்டக்டர்...! கொலைக்கான காரணம் என்ன? பகீர் சம்பவம்...!!!
மயிலாடுதுறையில் அரசுப் பேருந்து நடத்துநர் தமிழ்ச்செல்வன் நள்ளிரவில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்யக் கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் ஆனந்ததாண்டவபுரத்தைச் சேர்ந்த அரசுப் பேருந்து நடத்துநர் தமிழ்ச்செல்வன், நள்ளிரவில் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது ஆற்காடு சாலையில் வழிமறித்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் தேடிச் சென்றபோது, ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரது உடலைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
ஆற்காடு சாலையில் வழிமறித்து கொடூர தாக்குதல்
தமிழ்ச்செல்வன் அரசுப் பேருந்து நடத்துநராக பணியாற்றி வந்ததுடன், திமுகவின் தொழிலாளர் முன்னேற்றச் சங்க நிர்வாகியாகவும் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல் பணி முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்ற அவர், ஆற்காடு சாலையில் மர்ம நபர்களால் வழிமறிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: எப்ப பாரு நகையை காட்டி வீடியோ போட்டாங்க...! பிரபல பெண் யூடியூபர் வீட்டில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கொள்ளையர்கள்! பரபரப்பு வாக்குமூலம்...!!!
நள்ளிரவு ஆகியும் தமிழ்ச்செல்வன் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அவரைத் தேடி சென்றனர். அப்போது சாலையோரத்தில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி, கொலை தொடர்பாக விசாரணையைத் தொடங்கினர்.
கொலையை கண்டித்து சாலை மறியல்
இதற்கிடையே, கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் மோகன்குமார் தலைமையில் பொதுமக்களும் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி அருகே நடைபெற்ற சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர், கொலைக்கு காரணமானவர்களை விரைவில் கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
பெண்கள் தொடர்பான பிரச்னையா? போலீஸ் விசாரணை
கொலை செய்யப்பட்ட தமிழ்ச்செல்வனின் தந்தையும் தாயும் திமுகவில் முன்னாள் உள்ளாட்சிப் பொறுப்புகளில் இருந்தவர்கள் என கூறப்படுகிறது. தமிழ்ச்செல்வனுக்கு நேரடி முன்விரோதம் எதுவும் இல்லை என தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, தகாத உறவு அல்லது பெண்கள் தொடர்பான பிரச்னை காரணமாக கொலை நடந்திருக்கலாமா என்ற கோணத்திலும் மயிலாடுதுறை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான உண்மையான காரணம், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.