22 நாட்களுக்கு மேல் ஆகிட்டு..! வெவ்வேறு திசைகளில் சென்று மீண்டும் வீட்டுக்கே திரும்பும் விசாரணை...! செஞ்சி சிறுமி வழக்கில் என்னதான் நடந்தது...? நாளுக்கு நாள் அதிர்ச்சி...!!!
விழுப்புரம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி ஹேமலதா மாயமாகி 22 நாட்களாகியும் தகவல் கிடைக்காததால், சிபிசிஐடி விசாரணையின் வேகம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா மாயமாகி 22 நாட்கள் கடந்தும் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. பிறந்தநாளைக் கொண்டாடிய சில மணி நேரங்களிலேயே வீட்டில் இருந்து சிறுமி காணாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உள்ளூர் போலீசாரின் விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஆனாலும், சிறுமி எங்கிருக்கிறார் என்பது இன்னும் தெரியாததால் குடும்பத்தினரும் பொதுமக்களும் கவலையில் உள்ளனர்.
பல கோணங்களில் நடந்த விசாரணை; இன்னும் கிடைக்காத துப்பு
கூலித் தொழிலாளர்களான வடிவேலு - பவானி தம்பதியின் மகள் ஹேமலதா, கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி அதிகாலையில் மாயமானார். இதையடுத்து போலீசார் காடுகள், ஏரிகள், கிணறுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடுதல் நடத்தினர். வழக்கின் விசாரணை பல்வேறு கோணங்களில் முன்னெடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: என் மகள் உயிரோடதான் இருக்காள்..! முழு நம்பிகையுடன் கதறி அழுத காத்திருக்கும் தாய்... செஞ்சி சிறுமி வழக்கில் நெஞ்சை உருக்கும் தருணம்..!!!
சிறைக்கைதிகள், சாமியார்கள், மாந்திரீகம் தொடர்பான சந்தேகங்கள் எனப் பல்வேறு தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடந்ததாகக் கூறப்படுகிறது. முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர், மூதாட்டி மணிமேகலை உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பெங்களூரு வரை உறவினர்கள் தொடர்பாகவும் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. தற்போது மீண்டும் சிறுமியின் தந்தை மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
சிபிசிஐடி விசாரணையின் முன்னேற்றம் குறித்து கேள்வி
வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட பிறகும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. விசாரணை ஒவ்வொரு முறையும் வெவ்வேறு திசையில் சென்று, மீண்டும் குடும்பத்தினரிடம் திரும்புவது ஏன் என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
சாதாரண கூலித் தொழிலாளியின் குழந்தை என்பதால் விசாரணையில் சுணக்கம் காட்டப்படுகிறதா என்ற கேள்வியையும் சமூக ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர். செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த குழந்தையாக இருந்தால் இதே அளவு தாமதம் ஏற்பட்டிருக்குமா என்றும் அவர்கள் விமர்சிக்கின்றனர். எனினும், விசாரணையின் வேகம் குறித்த இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அதிகாரப்பூர்வ விளக்கம் தேவைப்படுகிறது.
குழந்தையை உயிருடன் மீட்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை
மகள் எப்படியாவது உயிருடன் கிடைக்க வேண்டும் என்பதே தங்களது ஒரே எதிர்பார்ப்பு எனத் தாய் பவானி வேதனையுடன் கோரிக்கை விடுத்து வருகிறார். 7 வயது குழந்தை காணாமல் போய் இத்தனை நாட்களாகியும் எந்தத் தகவலும் கிடைக்காதது குடும்பத்தினரை மட்டுமின்றி அப்பகுதி மக்களையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
அறிக்கைகள், அதிகாரிகள் மாற்றம் ஆகியவற்றைத் தாண்டி, சிறுமியை விரைவாகக் கண்டுபிடிக்க காவல்துறை முழு கவனம் செலுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. விசாரணையில் உள்ள அனைத்து கோணங்களையும் முறையாக ஆய்வு செய்து, ஹேமலதாவை பாதுகாப்பாக மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.