சற்று முன்... கடன் தள்ளுபடி...! 24,301 கடன் பெறுநர்களுக்கு... தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை!
தமிழக கூட்டுறவு வீட்டுவசதி சங்கக் கடன்களுக்கு ஒரே தவணைத் தீர்வுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அசல் தொகையை செலுத்தினால் பல்வேறு வட்டி மற்றும் அபராதங்கள் தள்ளுபடி செய்யப்படும்.
தமிழகத்தில் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் கடன் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளவர்களுக்கு வட்டித் தள்ளுபடி வழங்கும் ஒரே தவணைத் தீர்வுத் திட்டத்திற்கான (One-Time Settlement) அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 2026–27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில், நவம்பர் 20ஆம் தேதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2026 மார்ச் 31ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாக கடன் தவணைக் காலம் முடிந்து நிலுவையில் உள்ள அடமானக் கடன், கட்டுமானக் கடன் மற்றும் அது தொடர்பான கடன்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்படும். இதன் மூலம் தகுதியுள்ள கடன் பெறுநர்கள் தங்களது கடனை ஒரே தவணையில் செலுத்தி வட்டிச் சுமையைக் குறைக்கலாம்.
அசல் தொகையை செலுத்தினால் வட்டி, அபராதம் முழுமையாக தள்ளுபடி
இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ளவர்கள் கடன் பெற்ற அசல் தொகையை முழுமையாக ஒரே தவணையில் செலுத்தினால், நிலுவையில் உள்ள தவணை வட்டி, தவணை செலுத்தாததற்கான அபராத வட்டி, நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு விதிக்கப்பட்ட டிகிரி வட்டி மற்றும் சட்டச் செலவுகள் ஆகியவை முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்.
மேலும், குறைந்த வருமானப் பிரிவினர் (LIG) மற்றும் நடுத்தர வருமானப் பிரிவினர் (MIG) ஆகியோருக்கு கூடுதலாக 1 சதவீத வட்டித் தள்ளுபடியும் வழங்கப்படும். நிலுவைத் தேதி முதல் கடனைத் தீர்க்கும் தேதி வரை எளிய வட்டி மட்டுமே கணக்கிடப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24,301 கடன் பெறுநர்கள் பயனடைவார்கள்
அரசாணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஓராண்டுக்கு இந்தத் திட்டம் நடைமுறையில் இருக்கும். இதன் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 24,301 கடன் பெறுநர்கள் ரூ.2,430.28 கோடி அளவிலான வட்டித் தள்ளுபடிகளைப் பெற்று பயனடைவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் நிதி இழப்பை சம்பந்தப்பட்ட கூட்டுறவு நிறுவனங்களே ஏற்றுக்கொள்ளும்.
அதேநேரத்தில், 2026 மார்ச் 31ஆம் தேதிக்குப் பிறகு தவணைக் காலம் கொண்ட கடன்கள், விதிகளுக்குப் புறம்பாக வழங்கப்பட்ட கடன்கள் மற்றும் கூட்டுறவு சங்க ஊழியர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட கடன்களுக்கு இச்சலுகை கிடையாது. மேலும், கடன் பெறுநர்கள் மீது நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருந்தால், அவற்றைத் திரும்பப் பெற்ற பின்னரே ஒரே தவணைத் தீர்வுத் திட்டத்தின் கீழ் சலுகையைப் பெற முடியும் என விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.