10 நாட்களாக முயன்றும் முடியவில்லை... ஓட்டு கேட்டு அலைஞ்ச நா இப்போ வீதியில நிக்கிறேன்! அமைச்சர் அருண்ராஜ் மீது அதிரடி குற்றச்சாட்டு வைத்த தாமரைச்செல்வி..!!!
திருச்செங்கோட்டில் எக்ஸ்போ நடத்த நீதிமன்ற அனுமதி பெற்றும் தடுக்கப்பட்டதாக தாமரைச்செல்வி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். அமைச்சர் அருண்ராஜை சந்திக்க முடியாதது குறித்தும் வேதனை தெரிவித்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை தாமரைச்செல்வி, திருச்செங்கோட்டில் எக்ஸ்போ நடத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். நீதிமன்ற அனுமதி பெற்றிருந்தும் நிகழ்வை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் அருண்ராஜை சந்திக்க கடந்த 10 நாட்களாக முயன்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
நீதிமன்ற அனுமதி இருந்தும் எக்ஸ்போவுக்கு எதிர்ப்பு
சின்னத்திரை தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் தாமரைச்செல்வி, பெண் தொழில்முனைவோருடன் இணைந்து திருமண மண்டபங்களில் எக்ஸ்போ நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அந்த வகையில் திருச்செங்கோட்டில் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அங்குள்ள பெரிய கடைக்காரர்கள் மற்றும் சில உள்ளூர் அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விஜய் சேதுபதி சர்ச்சைப் பேச்சு விவகாரம்.. சீமான் திடீர் ஆதரவு! என்ன சொன்னார் தெரியுமா?
நீதிமன்றத்தின் அனுமதி பெற்றிருந்தபோதிலும் நிகழ்ச்சியை நடத்த விடாமல் தடுத்ததாக கூறி, தாமரைச்செல்வி வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. நிகழ்ச்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் ஏற்பட்ட தடையால் தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரை சந்திக்க முடியவில்லை என புகார்
இதுகுறித்து அமைச்சர் அருண்ராஜிடம் நேரில் முறையிட தாமரைச்செல்வி முயன்றதாக கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களாக அமைச்சரின் பகுதிக்குச் சென்று, அவரது உதவியாளர்கள் மற்றும் நெருங்கிய நபர்களிடம் பேசியும் நேரில் சந்திக்க முடியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நேரத்தில் அருண்ராஜுக்காக இரவு பகலாக பிரசாரம் செய்து, வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்ததாக கூறிய தாமரைச்செல்வி, தற்போது தனது பிரச்சினையை தெரிவிக்கக்கூட சந்திக்க முடியாதது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். அமைச்சர் அனைத்து மக்களுக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும் என்றும் அவர் தனது வீடியோவில் வலியுறுத்தியுள்ளார்.
ஏழைப் பெண்களுக்கு இலவச அரங்குகள் ஒதுக்கீடு
எக்ஸ்போ நிகழ்ச்சி தனது தனிப்பட்ட லாபத்திற்காக மட்டும் நடத்தப்படவில்லை என்றும் தாமரைச்செல்வி விளக்கம் அளித்துள்ளார். பெண் தொழில்முனைவோர் தங்கள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதற்காக அரங்குகள் அமைக்கப்பட்டதுடன், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்களுக்கு இலவசமாக அரங்குகள் ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, நிகழ்ச்சி தடுக்கப்பட்டதால் தங்களுக்கு மட்டுமின்றி, இதனை வாழ்வாதாரமாக நம்பியிருந்த பல பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். உள்ளூர் வியாபாரிகளுக்கு மட்டும் ஆதரவாக செயல்படுவதாக அமைச்சர் மீது அவர் குற்றம்சாட்டியதுடன், தனக்கு தவெக தலைவர் விஜய்யை பிடித்ததால் தேர்தல் நேரத்தில் அருண்ராஜுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள அவரது வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், திருச்செங்கோடு எக்ஸ்போ விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தாமரைச்செல்வி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பின் விளக்கமும் வெளியாகும் பட்சத்தில் விவகாரத்தின் முழு பின்னணி தெளிவாகும்.
இதையும் படிங்க: விஜய் சேதுபதிக்கு ஆதரவாக களமிறங்கிய அதிமுக!.. இன்பதுரை பரபரப்பு பேச்சு!