×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து உயிரிழந்த 3 குழந்தைகள்...! அதுவும் ஒரே அறிகுறியால் நடந்த அதிர்ச்சி... கதறி துடிக்கும் பெற்றோர்..!!!

உத்தரப் பிரதேசத்தின் லக்னோ அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் நான்கு நாட்களில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். காய்ச்சல், ரத்தக்கசிவு உள்ளிட்ட அறிகுறிகளுடன் நேர்ந்த மரணங்களுக்கான காரணம் குறித்து மருத்துவக் குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் நான்கு நாட்களுக்குள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் லேசான காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், குழந்தைகளின் உடல்நிலை திடீரென மோசமடைந்துள்ளது. மூக்கு, வாய் வழியாக ரத்தம் கசிந்ததாக பெற்றோர் தெரிவித்துள்ளதால், மரணத்திற்கான காரணம் குறித்து மருத்துவத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நான்கு நாட்களில் அடுத்தடுத்து உயிரிழந்த 3 குழந்தைகள்

லக்னோவின் மலிஹாபாத் பகுதியில் உள்ள கண்ட்சரா கிராமத்தைச் சேர்ந்த ஆஷிஷ் குமாரின் மூன்று குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். கடந்த நவம்பர் 9-ஆம் தேதி பிற்பகல், அவரது 3 வயது மகன் திவ்யான்ஷ் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. லேசான காய்ச்சல் இருந்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்தான்.

இதையும் படிங்க: 7 மாத கர்ப்பிணிக்கு திடீரென வந்த பிரசவ வலி.. ஒரே இரவில் மாறிய தலைவிதி! 4 குழந்தைகள்... மருத்துவமனையில் நடந்த அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்களால் கதறும் குடும்பம்!!!

இந்தத் துயரத்தில் இருந்து குடும்பத்தினர் மீள்வதற்குள், நவம்பர் 10-ஆம் தேதி இரண்டாவது மகனான 7 வயது கார்த்திக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தான். அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் இறந்ததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், காவல்துறை மற்றும் சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல் இருவரது உடல்களையும் அடக்கம் செய்துவிட்டனர்.

மூன்றாவது குழந்தைக்கும் ஏற்பட்ட அதே பாதிப்பு

நவம்பர் 10-ஆம் தேதி இரவு, ஆஷிஷ் குமாரின் 10 வயது மகள் லட்சுமிக்கும் காய்ச்சல் மற்றும் வயிற்றுவலி ஏற்பட்டது. இதையடுத்து துபக்கா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, வியாழக்கிழமை காலை லட்சுமி உயிரிழந்தார்.

ஒரே குடும்பத்தில் மூன்று குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த தகவல் வெளியானதும் காவல்துறையினரும் சுகாதாரத் துறையினரும் விசாரணையைத் தொடங்கினர். தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் என்.பி. சிங் உத்தரவின்பேரில், கூடுதல் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பி.என். யாதவ், மாவட்ட கண்காணிப்பு அதிகாரி டாக்டர் நிஷாந்த் நிர்வாண் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் கிராமத்திற்குச் சென்று ஆய்வு நடத்தினர்.

நிமோனியா பாதிப்பு கண்டுபிடிப்பு; உணவுப் பாதிப்பா என விசாரணை

மூன்றாவதாக உயிரிழந்த லட்சுமியின் ரத்தப் பரிசோதனையில் டைபாய்டு, டெங்கு, மலேரியா பாதிப்புகள் இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஆனால், மார்பு எக்ஸ்-ரே பரிசோதனையில் இரண்டு நுரையீரல்களிலும் தீவிர நிமோனியா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையே, உணவு நச்சுத்தன்மை காரணமாக குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கலாமா என்ற கோணத்திலும் சுகாதாரத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் என்.பி. சிங் கூறுகையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் விரிவான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே குழந்தைகளின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை உறுதி செய்ய முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

மலிஹாபாத் காவல் ஆய்வாளர் சுரேந்திர சிங் பாட்டி கூறுகையில், மூன்று குழந்தைகளும் ஒரே மாதிரியான அறிகுறிகளுடன் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர் என்றும், இதுவரை யார் மீதும் சந்தேகமோ புகாரோ தெரிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். தற்போது லட்சுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. விசாரணையில் தேவை ஏற்பட்டால் ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்ட மற்ற இரண்டு குழந்தைகளின் உடல்களையும் தோண்டி எடுத்து பரிசோதனை செய்யத் தயாராக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

இதையும் படிங்க: அடிஆத்தி... 3 நாட்களில் மட்டும் 30 நாகப்பாம்புகள்! வீட்டைத் தரையை தோண்டியபோது உடைந்த 8 ஆண்டு நீடித்த மர்மம்..! அதிரவைக்கும் சம்பவம்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#லக்னோ குழந்தைகள் உயிரிழப்பு #மர்ம மரணம் #உத்தரப் பிரதேசம் #Lucknow news #Medical Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story