பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்! அவரது சினிமா வெற்றி பயணத்தின் ஒரு பார்வை!
#MeToo: தேசிய மகளிர் ஆணையத்திற்கு புகார் அனுப்பிய பெண்ணிற்கு ஏற்பட்ட பரிதாபம்!

MeToo விவகாரம் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாக பரவி வருகின்றது. தங்களது பெயர்களை வெளியிட விரும்பாத பல பெண்கள் MeToo அமைப்பின் ஆதரவாளர்களிடம் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவுகள் பற்றி புகார் அளித்து வருகின்றனர். சின்மயி போன்ற ஆதரவாளர்கள் அதனை பகிரங்கமாக வெளியிட்டு வருகின்றனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்கள் மின்னஞ்சல் மூலம் தேசிய மகளிர் ஆணையத்திற்கு புகார் அனுப்பினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பை நம்பி தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பெண் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவுகள் குறித்து மின்னஞ்சலில் புகார் அனுப்பியுள்ளார். ஆனால் தேசிய மகளிர் ஆணையம் அதில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவர் பணிபுரியும் நிறுவனத்திற்கே அந்த கடிதத்தை அனுப்பியுள்ளது.
தற்போது குற்றம் சாட்டப்பட்ட அந்த ஆண் அதே நிறுவனத்தில் சுதந்திரமாக சுற்றி வரும் நிலையில் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிற்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது. இதனை அறிந்த மத்திய தகவல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தேசிய மகளிர் ஆணையம் இந்த பிரச்சனையை கையாண்ட விதம் மிகவும் மோசமாக உள்ளது. அவர்கள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மாறாக அந்தப் பெண்ணின் புகார் கடிதத்தை அவர் பணிபுரியும் நிறுவனத்திற்கு அனுப்பியது கண்டிக்கத்தக்கது என ஆணைய தலைவர் ஸ்ரீதர் ஆச்சார்யா கூறியுள்ளார்.
இது புகார் அளிக்கும் பெண்களை அச்சுறுத்தும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையா அல்லது அதிகாரிகளின் அறியாமையால் எடுக்கப்பட்ட நடவடிக்கையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.