பட்டத்தை துரத்திச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்... பெற்றோர் செய்த நெகிழ்ச்சியான செயல்!
சென்னை சூளைமேடு பகுதியில் சிறுவன் ஒருவன் பட்டம் எடுக்கும் போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் மரணம் அடைந்த போதும் அவனது பெற்றோர் செய்த காரியம் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது.
சென்னை சூளைமேடு பகுதியைச் சார்ந்தவர் தண்டபாணி இவரது இரண்டாவது மகன் பிரசன்னா. இவர்கள் பாரதி தெருவில் வசித்து வந்தனர். பிரசன்னா பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான்.

கடும் வெயிலின் காரணமாக கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டிருப்பதால் அப்பகுதி சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்திருக்கிறான் பிரசன்னா. அந்த நேரத்தில் பட்டம் ஒன்று அருந்து வருவதை பார்த்து அவன் அதனை பிடிப்பதற்காக பட்டத்தை துரத்தி இருக்கிறான். அந்தப் பட்டம் பெரியார் பாதையில் உள்ள வீடு ஒன்றின் இரண்டாவது மாடியில் சிக்கி இருக்கிறது. உடனே சிறுவன் மாடியின் மீது ஏறி அந்த பட்டத்தை எடுக்க முயன்றுள்ளான்.
ஒரு மாடியில் இருந்து இன்னொரு மாடிக்கு தாவும் போது எதிர்பாராத விதமாக 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து இருக்கிறான் பிரசன்னா. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக அவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் வரும் வழியிலேயே சிறுவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சிறுவனின் பெற்றோர் அவனது உடலையும் உடல் உறுப்புகளையும் தானமாக வழங்கியுள்ளனர். தங்களது மகன் பிறருக்காவது உதவும் வகையில் இருக்க வேண்டும் என அவர்கள் செய்த இந்த செயல் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.