தமிழகம்

வட கடலோர மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்! கனமழை எச்சரிக்கை

Summary:

yellow alert for north coastal area

டிசம்பர் 3, 4 தேதிகளில் தமிழக வடகடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நவம்பர் 16 ஆம் தேதி நாகை மாவட்டத்தில் கரையை கடந்த கஜா புயலால் தமிழக டெல்டா மாவட்டங்கள், மிகப்பெரிய சேதத்தை சந்தித்தன. புயல் தாக்கிய பகுதிகளில், மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் மக்கள் எதிர்பார்த்த வகையில் மழைப் பொழிவு அதிகமாக இல்லை, வெறும் காற்று மட்டுமே வீசியதால் விவசாயிகள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

அதனைத்தொடர்ந்து வடகிழக்கு பருவ மழையின் தீவிரமும் குறைந்தது. நவம்பர் 23 முதல் பெரும்பாலான இடங்களில் மழை இல்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மீண்டும் மழை துவங்கியது. ஆனால் அதற்குப் பின் வறண்ட வானிலையே தென்படுகிறது. இதனால் அடுத்து வரும் கோடை காலத்தை சமாளிக்க போதிய நீர் இல்லாமல் விவசாயிகள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

இந்நிலையில் கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்று, வரும், 3ம் தேதி முதல், மீண்டும் வலுப்பெறும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால், 4ம் தேதி முதல், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட வடக்கு கடலோர மாவட்டங்களில், கனமழை பெய்யலாம். எனவே, தமிழகம் மற்றும் ஆந்திர கடல் பகுதிக்கு, டிச., 4ம் தேதியில், 11 செ.மீ., வரை மழை பெய்வதற்கான, 'மஞ்சள் அலர்ட்' விடப்பட்டுள்ளது.


Advertisement