மனைவியின் நடத்தையில் சந்தேகம்: கணவன் செய்த காரியத்தால் பரிதவிக்கும் குழந்தைகள்..!

மனைவியின் நடத்தையில் சந்தேகம்: கணவன் செய்த காரியத்தால் பரிதவிக்கும் குழந்தைகள்..!



 worker who stabbed his wife due to suspicion of her behavior later committed suicide by hanging

கோயமுத்தூர் மாவட்டம், ரத்தினபுரி அருகேயுள்ள ஆறுமுக கவுண்டர் தெருவை சேர்ந்தவர் பூபாலன். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஷாலினி (26). இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தம்பதியினர் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக, பூபாலன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான சூலூரில் தங்கி, அங்கிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார்.

வாரம் ஒருமுறை ரத்தினபுரிக்கு வந்த பூபாலன் குழந்தைகளுடனும், மனைவியுடனும் பொழுதை கழித்துவிட்டு, குடும்ப செலவுக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில், பூபாலன் குழந்தைகளை பார்க்க கடந்த செவ்வாய்க்கிழமை ரத்தினபுரி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, ஷாலினிக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு உள்ளதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பூபாலன், இதுகுறித்து ஷாலினியிடம் கேட்டு தகராறு செய்துள்ளார்.

அந்த தகராறில், ஷாலினிஎதிர்பாராத விதமாக பூபாலனை தாக்கியுள்ளார். இதனால் பூபாலன் காயமடைந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் பூபாலனை மீட்டு மருத்துவனைக்கு சிகிச்சை அளிப்பதற்காகஅழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் என்று கூறி இடையில் இறங்கி சென்றுள்ளார்.

இதற்கிடையே, கடந்த புதன்கிழமை அதிகாலை சுமார் 4 மணியளவில் குடி போதையில் வீட்டிற்கு வந்த பூபாலன் வீட்டில் இருந்த ஷாலினியை கத்தியால் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஷாலினியை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், கத்தியால் குத்தியதால் மனைவி இறந்து விட்டதாக எண்ணி வேதனையடைந்த பூபாலன் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து ரத்தினபுரி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்த காவல்துறையினர், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.