அரசியல் தமிழகம்

பலரும் எதிர்பார்க்கும் உள்ளாட்சித் தேர்தல் முடிவு! வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும் தெரியுமா?

Summary:

vote counting satart time


தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்‌பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை தவிர்த்து, 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்பட்டது. மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு ‌நடந்தது.

முதல்கட்ட தேர்தலில் 76 சதவீத வாக்குகளும், இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73 சதவீத வாக்குகளும் பதிவானது. இரண்டு கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்படுகின்றன. இதற்காக தமிழகம் முழுவதும் 315 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும், வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறை திறக்கப்பட்டு வாக்குப் பெட்டிகள் மேஜைகளுக்கு கொண்டு வரப்படும். அங்கு வைத்து வாக்குச் சீட்டுகள் பிரிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். முன்னணி நிலவரம் பிற்பகலுக்கு பிறகும் இறுதி முடிவு மாலையும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மேஜைகளில் வாக்குச்சீட்டுகள் கொட்டப்பட்டு ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கண்காணிப்பாளர் மற்றும் 3 வாக்கு எண்ணுபவர்கள் பணியில் இருப்பார்கள். இவர்கள் மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு பதிவான வாக்குகளை தனித்தனியாக பிரிப்பார்கள்.

4 பதவிகளுக்கும் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக தனித்தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 4 அறைகளிலும் அந்த பதவிகளுக்கான வாக்குகள் கொண்டு செல்லப்படும். அதனைத் தொடர்ந்து பல்வேறு சுற்றுகளாக வாக்கு எண்ணும் பணி நடைபெறவுள்ளது.

 உயர்நீதிமன்ற அறிவுறுத்தலைத் தொடர்ந்து அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் நடக்கும் நிகழ்வு‌கள் வீடியோ பதிவு செய்யப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Advertisement