மாண்டுபோன மனிதம்: பேருந்தில் நெஞ்சு வலியால் துடித்தவரை, நடுவழியில் இறக்கிச்சென்ற சோகம்.!
தனியார் பேருந்து ஓட்டுநர் - நடத்துனரின் அலட்சிய செயலால் நேர்ந்த சோகம் அப்பகுதி மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர், நல்ல குற்றாலம் தெருவில் வசித்து வருபவர் ஜோதி பாஸ்கர் (வயது 50). சங்கரன் கோவிலில் இருக்கும் ஹோட்டலில் சமையல் மற்றும் சரக்கு மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.
இதனால் தினமும் அதிகாலை நேரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பேருந்து உதவியுடன் திருநெல்வேலிக்கு சென்று மீண்டும் வீடு திரும்புவார். இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து திருநெல்வேலி பயணித்துள்ளார்.
தனியார் பேருந்தில் ஓட்டுநராக மகேஷ் என்பவரும், நடத்துனராக கோபால் என்பவரும் பணியில் இருந்துள்ளனர். நேற்று பேருந்து புறப்பட்ட சில வினாடிகளில் சோர்வாக காணப்பட்ட ஜோதி பாஸ்கர், சங்கரன்கோவிலுக்கு டிக்கெட் எடுத்து இருக்கிறார்.
பேருந்து ராஜபாளையம் நகருக்குள் நுழைந்த சமயத்தில், அவருக்கு திடீரென கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டு துடிதுடிக்கவே, பேருந்தில் இருந்தவர்கள் கண்டுகொள்ளவில்லை.
தனியார் பேருந்து இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையை கடந்து சென்ற நிலையில், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அடிப்படை எண்ணம் இல்லாமல் வலியால் துடித்தவரை சங்கரன்கோவில் முக்கு பகுதியில் சாலையோர டீக்கடை முன்பு அமர வைத்துவிட்டு பேருந்து புறப்பட்டு சென்றுள்ளது.
டீக்கடையை திறக்க வந்தவர்கள், ஜோதி பாஸ்கர் படுத்திருந்ததை பார்த்து அவசர உதவிக்கு தகவல் தெரிவித்தனர். அவசர ஊர்தி பணியாளர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து தகவல் இருந்து அவரின் குடும்பத்தினர், ராஜபாளையம் வந்து கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.