பெற்றோரை கொல்ல உணவில் பூச்சி மருந்து.. சொத்துக்காக மகன் செய்த படுபாதக செயல்..!Viluppuram Vikravandi Parents Complaint Against Son about Murder Attempt Add Poison on Food

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி, சிறுவை கிராமத்தில் வசித்து வருபவர் தம்புசாமி (வயது 78). இவர் விவசாயி ஆவார். இவரின் மனைவி தனகோடி (வயது 70). இவர்கள் இருவரும் விஷம் கலக்கப்பட்ட இட்லி மாவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து புகார் கொடுத்தனர். இந்த புகாரில், 

"எங்கள் இருவருக்கும் தமிழரசன், மோகன்தாஸ் என்ற 2 மகன்கள் உள்ளனர். தமிழரசன் சென்னையில் இருக்கிறார். எனது மனைவியின் பெயரில் சொந்தமாக இரண்டரை ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. இந்த நிலத்தில் மோகன்தாஸ் விவசாயம் செய்து வருகிறார். ஆனால், கடந்த 5 வருடமாக அவர் எங்களை கவனிப்பது இல்லை. உணவு கூட கொடுக்காமல் துன்புறுத்தி வருகிறார். விவசாய நிலத்தினை தனது பெயருக்கு எழுதி வைக்க வேண்டும் எனவும் கடந்த ஒரு வாரமாக துன்புறுத்தி வருகிறார். 

Viluppuram

இந்த விஷயம் குறித்து மயிலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பலனில்லை. காவல் நிலையத்தில் புகார் அளித்ததால், மோகன்தாஸ் எங்களை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார். மகனின் செயல்பாட்டுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வீட்டில் இருந்த நிலையில், இரவு இட்லி தயார் செய்ய தனகோடி மாவை எடுத்து வந்தார். அப்போது, மாவு நீல நிறமாக இருந்தது. அதில் விஷம் கலக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகித்து மோகன்தாஸிடம் கேள்வி எழுப்பிய போது, அதில் மகன் பூச்சி மருந்து கலந்து உறுதியானது. 

எனது மகனே சொத்துக்காக எங்களை கொலை செய்ய உணவில் விஷம் கலந்துள்ளதை எங்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அவரின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் குறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.