மாணவர் சங்க மாநாட்டிற்க்கு வந்த மாணவர்கள் கால்வாயில் குளித்த போது விபரீதம்: ஒருவர் பரிதாப பலி..!

மாணவர் சங்க மாநாட்டிற்க்கு வந்த மாணவர்கள் கால்வாயில் குளித்த போது விபரீதம்: ஒருவர் பரிதாப பலி..!


Tragedy occurs when students who came for the Student Union State Conference take a bath in the canal

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகேயுள்ள இருப்பாலி பகுதியை சேர்ந்த தாமரைச்செல்வன்(18), ஜலகண்டபுரத்தை சேர்ந்த தினேஷ்குமார் (18). இவர்கள் இருவரும் 50 க்கும் மேற்பட்ட மாணவர்களுடன், வாடகை பேருந்தின் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று நடந்த இந்திய மாணவர் சங்க அமைப்பின், மாநில மாநாட்டிற்கு சென்றனர். திருவாரூருக்கு வரும் வழியில் அவர்கள் தஞ்சை பெரியகோவிலை சுற்றிப்பார்த்தனர். பின்னர் தாமரைச்செல்வன் மற்றும் தினேஷ்குமார் ஆகியோர், அருகில் உள்ள கல்லணை கால்வாய்க்கு சென்று குளித்துள்ளனர்.

அப்போது, கால்வாயில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் எதிர்பாராத விதமாக இருவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தஞ்சை தீயணைப்பு நிலைய வீரர்கள், தண்ணீரில் தத்தளித்த தினேஷ்குமாரை பத்திரமாக மீட்டனர். மேலும், மாயமான தாமரைச்செல்வனை தீவிரமாக தேடி வந்தனர். நேற்று மாலை வரை தேடியும் கிடைக்காத நிலையில், தேடுதல் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை  தஞ்சை சாந்தப்பிள்ளை கேட் மேம்பாலம்  உள்ள பகுதியில் உள்ள கல்லணை கால்வாயில் தாமரைச்செல்வனின் உடல் மிதந்தது. இது குறித்து தகவலறிந்த தஞ்சை மேற்கு காவல் நிலைய காவல் அதிகாரிகள், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.