108 அவசரஊர்தி கவிழ்ந்து கோர விபத்து.. பிறந்த பச்சிளம் சிசு, ஓட்டுநர் பரிதாப பலி.. நெஞ்சை உலுக்கும் சோகம்.!

108 அவசரஊர்தி கவிழ்ந்து கோர விபத்து.. பிறந்த பச்சிளம் சிசு, ஓட்டுநர் பரிதாப பலி.. நெஞ்சை உலுக்கும் சோகம்.!


Tiruppur Udumalaipettai Pollachi Ambulance Accident

பிறந்த குழந்தையை மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்லும் வழியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அவசர ஊர்தியால் 2 உயிர் பரிதாபமாக பலியாகியுள்ள சோகம் நடந்துள்ளது. 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைபேட்டையில் வசித்து வருபவர் சிவசங்கரன் (வயது 26). இவரின் மனைவி ரம்யா. கர்ப்பிணியாக இருந்த ரம்யாவிற்கு, இன்று உடுமலைப்பேட்டை தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு தொடர் மூச்சுத்திணறல் பிரச்சனை இருந்ததால், மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையடுத்து, தனியார் அவசர ஊர்தியில் குழந்தை, குழந்தையின் தந்தை சிவசங்கர், உறவினர்கள் பழனிச்சாமி, சகுகந்தலா, வள்ளி, அவசர ஊர்தி செவிலியர் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் பொள்ளாச்சி வழியே கோயம்புத்தூருக்கு வருகை தந்துள்ளனர். அவசர ஊர்தியை ஓட்டுநர் ரவீந்திரன் இயக்கியுள்ளார்.

Tiruppur

அவசர ஊர்தி பொள்ளாச்சியை அடுத்துள்ள மலுமிச்சம்பட்டி அருகே வருகையில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சளைத்தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ஆண் குழந்தை மற்றும் அவசர ஊர்தி ஓட்டுநர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பழனிச்சாமி, சகுந்தலா மற்றும் வள்ளி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மதுக்கரை காவல் துறையினர், குழந்தை மற்றும் அவசர ஊர்தி ஓட்டுநர் ரவீந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், பொக்லைன் உதவியுடன் அவசர ஊர்தியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.