Tirupattur News: காவு வாங்கிய டிப்பர் லாரி.. தவெக பிரமுகர் அதிரடி கைது.. காரணம் என்ன?
டிப்பர் லாரி மோதி கட்டிடத் தொழிலாளி பலியான சோகம் திருப்பத்தூரில் நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே நடந்த சாலை விபத்தில் கட்டிடத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம்-கிட்டபையனூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (38) மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தபால்மேடு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (58) ஆகியோர் நேற்று முன்தினம் காலை பைக்கில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தனர்.
சம்பவ இடத்திலேயே பலி:
அப்போது ஏலகிரிமலை, பாடானூர் கிராமத்தைச் சேர்ந்த ரங்கசாமி (26) ஓட்டி வந்த டிப்பர் லாரி, அதிவேகமாக வந்து பைக் மீது மோதியது. கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்ததில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜேஷ் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: #Breaking: காலையிலேயே மரண செய்தி.. அரசு பேருந்து - வேன் நேருக்குநேர் மோதி கோர விபத்து.. இருவர் பலி.!

வழக்குப்பதிவு:
விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அந்த லாரி சட்டவிரோதமாக மண் கடத்தலில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து உயிர்சேதம் விளைவித்தல், அதிவேக ஓட்டம், சட்டவிரோத மண் கடத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தவெக நிர்வாகி:
தலைமறைவாக இருந்த டிப்பர் லாரி டிரைவர் ரங்கசாமி மற்றும் மண் கடத்தலுக்கு துணைபோனதாக கூறப்படும் லாரி உரிமையாளர் நவமணி (48) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட நவமணி, தவெக கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.