மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இடிந்து விழுந்த கட்டிடம்; திருநெல்வேலியில் பரபரப்பு.!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இடிந்து விழுந்த கட்டிடம்; திருநெல்வேலியில் பரபரப்பு.!


Tirunelveli District Collector Office Building collapse

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 100 ஆண்டுகள் பழமையான கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் முன்னதாக நீதிமன்றம் இயங்கி வந்த நிலையில், கடந்த 1997 முதல் காவல் ஆணையர் அலுவலகம் செயல்பட்டது. அதனைத்தொடர்ந்து, பாளையங்கோட்டையில் புதிய கமிஷனர் அலுவலகம் கட்டி திறக்கப்பட்டது. 

இதனால் ஆட்சியர் அலுவலத்திற்குள் உள்ள பழமையான கட்டிடத்தில் கனிமவல்துறை, இரயில்வே நில எடுப்பு அலுவலகம், மாடியில் மகளிர் திட்ட அலுவலகம் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று காலை நேரத்தில் மகளிர் அலுவலக பகுதி இடிந்து விழுந்துள்ளது. சம்பவத்தன்று கீழ்ப்பகுதியில் ஆட்கள் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. 

கட்டிடம் இடிந்து விழுந்ததும் அதிர்ச்சியடைந்த மகளிர் திட்ட அலுவலக பெண் பணியாளர்கள், பதறியபடி மாடிவழியில் இறங்கி வந்தனர். இந்த தகவல் அறிந்த ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கணேஷ்குமார் நேரில் வந்து பார்வையிட்டு, அதிகாரிகள் வேறிடத்தில் பணிபுரிய அறிவுறுத்தினர்.

இந்த விஷயம் தொடர்பாக மகளிர் திட்ட அலுவலர்கள் கூறுகையில், "ஆட்சியர் அலுவலகத்திற்குள் இயங்கி வரும் மகளிர் திட்ட அலுவலகத்தில் 200 பெண்கள் பணியாற்றி வருகிறோம். இடிந்து விழுந்த பகுதியை கடந்தே நாங்கள் கழிவறை செல்வோம். மதிய வேளைகளில் இங்கு அமர்ந்தே சாப்பிடுவோம். 

இன்றைய நாளின் காலையில் ஊழியர்களுக்கு வாராந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றதால் பணியிடத்தில் யாரும் இல்லை. இதனால் எவ்வித காயமும் யாருக்கும் ஏற்படவில்லை" என்று தெரிவித்தனர்.