நொடிப் பொழுது ஏமாந்த தாய்!,, குழந்தையை பறி கொடுத்த சோகம்!.. கதறும் கிராமம்..!

நொடிப் பொழுது ஏமாந்த தாய்!,, குழந்தையை பறி கொடுத்த சோகம்!.. கதறும் கிராமம்..!


The tragedy of a mother losing her child in an instant

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகேயுள்ள கோவிந்தம்பாளையம் கிராமத்தில் உள்ள மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவர் நெல் அறுவடை செய்யும் இயந்திரத்தின் ஆப்பிரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி பிரியா. இந்த தம்பதியினரின் மகன் சாத்விக் (1-1/2.).

இந்த நிலையில், நேற்று காலை வழக்கம் போல் ராஜேஷ்குமார் வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். வீட்டில் இருந்த பிரியா மதிய உணவு சமைத்துக் கொண்டு இருந்துள்ளார். இதற்கிடையே வேலைக்கு சென்ற ராஜேஷ்குமார், உணவு இடைவெளியில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். வந்தவுடன் மகனை தேடிய ராஜேஷ்குமார், குழந்தையை காணாத சந்தேகத்தில் வீட்டின் அருகில் திறந்து இருந்த தண்ணீர் தொட்டிக்குள் பார்த்தபோது அங்கே குழந்தை சாத்விக், தண்ணீரில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார்.

இதனையடுத்து குழந்தையை தண்ணீர் தொட்டியில் இருந்து மீட்ட ரஜேஷ்குமார், 108 ஆம்புலன்ஸ் மூலம் தலைவாசல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், சிகிச்சை பலனின்றி குழந்தை சாத்வித் பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தையின் உடலை பார்த்து தாய் பிரியா மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி காண்போரை கலங்கச்செய்தது. இந்த சம்பவம் குறித்த புகாரின் அடிப்படையில், தலைவாசல் காவல்துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை சாத்விக், திறந்து கிடந்த தரைமட்ட தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.