மீண்டும் ஒரு திருமண மோசடி..!! 6 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண ராணி..!!

மீண்டும் ஒரு திருமண மோசடி..!! 6 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண ராணி..!!



The police have arrested a young woman who was involved in marriage fraud near Salem.

திருமண மோசடியில் ஈடுபட்ட இளம் பெண்ணை காவல்துறையினர் சேலம் அருகே மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். 

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகேயுள்ள சிறுதலைப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பூண்டியான். இவருடைய மகன் மணிகண்டன் (29). இவருக்கு கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவரது மகள் மகாலட்சுமி என்பவருடன் முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது.

ஒரு கட்டத்தில் திருமணம் குறித்து மணிகண்டன் மகாலட்சுமியுடன் பேச, வீட்டில் ஒத்துக் கொள்ளமாட்டார்கள் அவர்களுக்கு தெரியாமல் வந்துவிடவா என்று மகாலட்சுமி கேட்டுள்ளார். இதற்கு மணிகண்டன் சம்மதிக்கவே. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் தேதி, மேல்மலையனூர் அருகேயுள்ள அவலூர்பேட்டையில் உள்ள ஒரு கோவிலில் வைத்து காதலியை கரம்பிடித்துள்ளார். திருமணத்தின் போது மணிகண்டன் வீட்டில் மகாலட்சுமிக்கு 8 சவரன் தங்க நகை அணிவித்துள்ளனர்.

இருவரும் 3 வாரங்கல் தாம்பத்தியத்தில் திளைத்திருக்க, திடீரென ஒருநாள் தனது வீட்டில் சொத்து பிரச்சினை நடப்பதாகவும் அதனை தீர்க்க தனது தந்தை அழைத்ததாகவும் கூறி பிறந்த வீட்டுக்கு செல்ல மணிகண்டனிடம் அனுமதி கேட்டுள்ளார். மனைவியை பிரிய மனம் இல்லாமல் பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைத்த மணிகண்டன் சீக்கிரம் திரும்பி வந்துவிடு என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், மகாலட்சுமி திரும்பி வரவும் இல்லை போன் செய்யவும் இல்லை. இதற்கிடையே வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் பணம் மாயமானதால் சந்தேகமடைந்த மணிகண்டன் வீட்டார், இது குறித்து வளத்தி காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மகாலட்சுமியை தேடிவந்தனர்.

இந்த நிலையில் மகாலட்சுமி சேலத்தில் இருப்பதாக தகவல் கிடைக்க, அங்கு விரைந்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னதாக 4 பேரையும், மணிகண்டனுக்கு பிறகு ஒருவரையும் திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.