புகார் கொடுக்க போன பெண்ணை பிளாக் செய்த போலீசார்: தாயை காணாமல் கண்ணீருடன் தவித்த சிறுமிகள்..!

புகார் கொடுக்க போன பெண்ணை பிளாக் செய்த போலீசார்: தாயை காணாமல் கண்ணீருடன் தவித்த சிறுமிகள்..!


The police blocked the woman who went to complaint

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகேயுள்ள தாப்பாத்தி பகுதியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் 1000க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். மறுவாழ்வு முகாமில் நேற்று கபடி போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. போட்டி நடந்து கொண்டிருந்த போது, அந்த முகாமினை சேர்ந்த குகன் என்பவர் குடிபோதையில் தகராறு செய்யதாக கூறப்படுகிறது.

மேலும் இன்று காலையிலும் குகன் மற்றும் சிலர் சுதாகரன் என்பவர் வீட்டிற்குள் நுழைந்து அவரது இரு பெண் குழந்தைகளை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே சுதாகரன் மனைவி சகாயராணி தனது வீட்டில் நுழைந்து தகராறு செய்த குகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது புகார் அளிக்க மாசார்பட்டி காவல் நிலையத்திற்கு தனது குழந்தைகள், அவரது உறவினர் பஞ்சவர்ணம் என்பவருடன் சென்றுள்ளார்.

இதனையடுத்து சகாயராணியின் குழந்தைகளை வெளியே அனுப்பிய காவல்துறையினர் சகாயராணி, பஞ்சவர்ணம் இருவரையும் காவல் நிலையத்திற்குள் அமரவைத்துள்ளனர். நீண்ட நேரம் கழித்தும்  தனது தாய் வெளியே வராததால், பதற்றமடைந்த குழந்தைகள் இருவரும், முகாமில் உள்ள தங்களது உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். அவர்கள் வந்து பேசியும் காவல்துறையினர் இருவரையும் வெளியில் விடவில்லை. இதன் காரணமாக அவர்கள் காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, சகாயராணி மற்றும் பஞ்சவர்ணத்தை காவல்துறையினர் வெளியே அனுப்பி வைத்தனர். காலையில் உள்ளே சென்ற தாயை காண காத்திருந்த சகாயராணியின் குழந்தைகள் அவர் வெளியே வந்ததும், கண்ணீருடன் கட்டிதழுவியது அங்கிருந்தவர்களை கலங்க வைத்தது. இதற்கிடையே சகாயராணி அளித்த புகாரின் அடிப்படையில் குகன், அவரது தம்பி தாஸ் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.  

குகன் தரப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆனந்தராஜ், சிவக்குமார், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இரு தரப்பினை சேர்ந்த 16 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குகன், தாஸ், சிவக்குமார், ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர்.