காதலித்து திருமணம் செய்த புதுமண தம்பதியினர் வெட்டி கொலை: மணமகளின் தந்தை வெறிச்செயல்..!

காதலித்து திருமணம் செய்த புதுமண தம்பதியினர் வெட்டி கொலை: மணமகளின் தந்தை வெறிச்செயல்..!


The newlyweds who fell in love and got married were hacked to death

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகேயுள்ள வீரப்பட்டி ஆர்.சி தெரு சேவியர் காலனியை சேர்ந்தவர் முத்துக்குட்டி (50). இவரது மகள் ரேஷ்மா (20). இவர் கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி 2 ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது உறவினரான மாணிக்கராஜ் (26) என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இவர்களது காதலுக்கு ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் ரேஷ்மாவுக்கு வேறொரு மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்தம் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய ரேஷ்மா தனது காதலர் மாணிக்கராஜை திருமணம் செய்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதுமண தம்பதியரான மாணிக்கராஜ்-ரேஷ்மா இருவரும் ஊருக்கு திரும்பி வந்துள்ளனர். இதனையறிந்த ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி இவர்களது திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கடுமையான வாக்குவாதத்திற்கு பின்னர் தம்பதியினர் இருவரும் மாணிக்கராஜின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து நேற்று ரேஷ்மா மற்றும் அவரது கணவர் மாணிக்கராஜ் இருவரும் வீட்டில் இருந்தபோது, அங்கு அரிவாளுடன் வந்த முத்துக்குட்டி இருவரையும் சராமாரியாக வெட்டிக் கொலை செய்ததுடன் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் எட்டயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலறிந்து  சம்பவ இடத்துக்கு வந்த எட்டயபுரம் காவல்துறையினர், இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய முத்துக்குட்டியை வலைவீசி தேடி வருகின்றனர்.