சாக்லெட் வாங்கித்தராத அம்மா!,. பிறந்தநாளன்று தூக்கில் தொங்கிய மாணவி..!

சாக்லெட் வாங்கித்தராத அம்மா!,. பிறந்தநாளன்று தூக்கில் தொங்கிய மாணவி..!


The girl who hanged herself on her birthday

சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சி பகுதியில் உள்ள சரவணா நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருடைய மகள் தமிழ்நேயா (16). இவர் கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். தமிழ்நேயாவுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 16 வது பிறந்த நாள் வந்துள்ளது.

இந்த நிலையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு உறவினர்கள் மற்றும் தோழிகளுக்கு சாக்லெட் கொடுக்க வேண்டும் என்று தனது தாயாரிடம் கூறியுள்ளார். அதற்கு இணங்காத ராஜேஸ்வரி, சாக்லெட் வாங்கி கொடுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தமிழ்நேயா, நேற்று காலை வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி தமிழ்நேயா தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்தநாளில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.