அரசியல் தமிழகம்

சுபஸ்ரீ விபத்து மரணம்: உண்மையை ஒப்புக்கொண்ட அதிமுக முன்னாள் கவுன்சிலர்!

Summary:

Subashri death

சென்னையில் சமீபத்தில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்பொழுது, சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்து இளம்பெண் பலியான சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பொதுஇடத்தில் அனுமதியின்றி பேனர் வைத்து இடையூறு செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து ஜெயகோபால் தலைமறைவாக இருந்தார். இந்தநிலையில் தலைமறைவாக இருந்த ஜெயகோபாலை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். மேலும் அவரது சிக்னலை வைத்து அவரை கண்காணித்தபோது அவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் தனியார் விடுதியில் ஜெயகோபால் தங்கி இருப்பது போலீஸ் கண்காணிப்பில் உறுதியானது.

இதனையடுத்து தனிப்படை போலீசார் நேற்று விடுதியை சுற்றிவளைத்து ஜெயகோபாலை கைது செய்தனர். மேலும் அவரை பரங்கிமலை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்து வந்தநிலையில் இன்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஜெயகோபால் ஆஜர்படுத்தப்பட்டார். விதிமுறைகளை மீறி பேனர் வைத்தது தவறுதான் என  நீதிபதி முன் தன்மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார் ஜெயகோபால். இதனையடுத்து அக்டோபர் 11ம் தேதி வரை ஜெயகோபாலை  நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.


Advertisement