தமிழகம்

அத்தியாவசிய பணியாளர்களுக்கு கூடுதலாக 204 மின்சார ரயில்கள்.!

Summary:

அத்தியாவசிய பணியாளர்களுக்கு கூடுதலாக 204 மின்சார ரயில்கள் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் நாடுமுழுவதும் பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மாநிலங்களுக்கு இடையே அவ்வப்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. ஆனாலும் புறநகர் மின்சார ரயில் சேவை தொடங்கப்படாமல் இருந்தது.

இந்தநிலையில், அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் புறநகர் மின்சார ரயிலில் பயணிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் தனியார் நிறுவன ஊழியர்களும் புறநகர் மின்சார ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் அனைவரும் பயணம் மேற்கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்தது. இதனையடுத்து அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், கொரோனா தடுப்பு முதல் நிலை பணியாளர்களுக்காக தற்போது 150 சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கபட்டு வருகின்றன. 

இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) முதல் கூடுதலாக 204 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சென்னையின் புறநகர்களான ஆவடி, கும்மிடிப்பூண்டி, வேளச்சேரி, செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து சென்னை எழும்பூர் மற்றும் எம்.ஜி.ஆர் சென்டிரல் இடையே இந்த 204 மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement