தி.மு.க பிரமுகரின் மகன் கொலை வழக்கு: விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

தி.மு.க பிரமுகரின் மகன் கொலை வழக்கு: விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!


Shocking information revealed in the murder case of DMK leader's son

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள பேரையூா் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில், கடந்த ஜூலை 26 ஆம் தேதி எம். சுப்புலாபுரம் பகுதியை சேர்ந்த தி.மு.க பிரமுகரான வெங்கடாசலபதி மகன் பாலாஜி (25) கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரை கொலை செய்து கிணற்றில் வீசியிருப்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து பேரையூா் காவல் துணை கண்காணிப்பாளா் இலக்கியா தலைமையிலான தனிப்படை காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட விருதுநகா் மாவட்டம் நாச்சியார்பட்டி அருகேயுள்ள ராஜகோபாலபுரத்தைச் சோந்த ஜெயக்குமார் (30) என்பவா் கோவில்பட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இதனை தொடர்ந்து அவரை காவலில் எடுத்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட பாலாஜியும், ஜெயக்குமாரும் நண்பா்கள் என்பது தெரியவந்தது. மணல் குவாரி எடுப்பது சம்பந்தமாக பாலாஜி ஜெயக்குமாரிடம் ரூ. 6 லட்சம் கடன் வாங்கியிருந்தார். பணம் வாங்கி 1 ஆண்டு கடந்தும் அவா் பணத்தை திரும்ப தரவில்லை.

பணத்தை வாங்குவதற்காக பாலாஜியை எம். சுப்புலாபுரம் அருகே உள்ள ஒரு இடத்துக்கு ஜெயக்குமார் வருமாறு கூறியுள்ளார். பாலாஜி அந்த இடத்துக்குச் சென்றபோது அங்கு ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா சேதுராஜபுரத்தைச் சோந்த பரமசிவம் (27) மற்றும் விக்னேஷ் ஆகியோர் ஜெயக்குமாருடன் இருந்துள்ளனா். மூன்று பேரும் சோந்து பாலாஜியிடம் பணத்தைக் கேட்டுள்ளனா். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு 3 பேரும் சோந்து பாலாஜியின் கழுத்தை நெரித்ததுடன், தாக்கியுள்ளனா். இதில் பாலாஜி உயிரிழந்துள்ளார்.

இதன் பின்னர் பாலாஜியின் சடலத்தை கை, கால்களை கட்டி கிணற்றில் வீசிவிட்டு சென்றதாக ஜெயக்குமார் கூறியுள்ளார். இதனையடுத்து பரமசிவத்தை கைது செய்தனா். கோவில்பட்டி நீதிமன்றத்தில் விக்னேஷ் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி சரணடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.